செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பை நீதிபதி அல்லி ஒத்தி வைத்து இன்று (ஜூன் 15) உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை முதன்மை நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட மனு, அமலாக்கத் துறை காவலில் எடுக்க கேட்டு தாக்கல் செய்த மனு ஆகியவற்றை நீதிபதி அல்லி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
அமலாக்கத் துறை சார்பில் செந்தில் பாலாஜி காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அமலாக்கத் துறை சார்பில், செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. உண்மையை கண்டறிய காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்று வாதிடப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத் துறை காவல் கோரிய மனு நகல் உங்களுக்கு கிடைத்ததா? என்று நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு கிடைக்கவில்லை என்று செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.
கைதான நள்ளிரவில் என்ன நடந்தது என்ற நீதிபதியின் கேள்விக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்த போது சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அவர் வந்து சென்று ஓரிரு நாளில் அமலாக்கத் துறை நடவடிக்கையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறேன். 18 மணி நேர விசாரணையில் சித்திரவதைக்கு உள்ளானேன்” என்று கூறியுள்ளார் செந்தில் பாலாஜி.
இதை கேட்ட நீதிபதி அல்லி, அமலாக்கத்துறை மனுவை செந்தில் பாலாஜியிடம் அளித்து கையொப்பம் பெற நீதிமன்ற பணியாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியுள்ளது.
அமலாக்கப் பிரிவு காவலில் வைக்க அனுமதிக்க கூடாது. மருத்துவ காரணங்களின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். ஏற்கனவே போதுமான விசாரணையை அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியிடம் நடத்தியுள்ளது” என்று வாதிட்டார்.
15 நாள் காவலில் செல்ல முடியுமா என்ற நீதிபதியின் கேள்விக்கும் செந்தில் பாலாஜி தரப்பு இயலாது என்று மறுப்புத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அமலாக்கத் துறை துணை இயக்குநர் கார்த்திக் தசாரியிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார். வழக்குப்பதிவு செய்த விவரம், விசாரணை நடத்திய விவரம், பணமோசடி எப்படி நடந்தது ஆகியவற்றை கார்த்திக் தசாரி நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். அமலாக்கத் துறை அதிகாரியின் விளக்கம் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, உயர் நீதிமன்ற தீர்ப்பையும் பார்க்க வேண்டும் என்று கூறி தீர்ப்பை தள்ளி வைத்துள்ளார்.
பிரியா
“செந்தில் பாலாஜியை நீக்குங்கள்” : ஆளுநரிடம் அதிமுக மனு!
காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி!
