செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: இன்று தீர்ப்பு!
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட மனு, அவரை அமலாக்கத் துறை காவலில் எடுக்கக் கோரிய மனு என இரண்டு மனுக்கள் மீது இன்று (ஜூன் 16) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி பணமோசடி செய்ததாக அவர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி அதிகாலை வரை சுமார் 18 மணி நேரம் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று இரவு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு ஆகிய இரண்டையும் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரித்தார்.
அப்போது காணொளி காட்சி வாயிலாக செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். செந்தில் பாலாஜியிடம், 15 நாள் காவலில் செல்ல தயாரா? கைதான நள்ளிரவு என்ன நடந்தது? என்று நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினர்.
இதற்கு செந்தில் பாலாஜி, “நீதிமன்ற காவலில் செல்ல இயலாது. உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்த போது ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவர் வந்து சென்ற ஓரிரு நாட்களில் நான் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு அமலாக்கத் துறையால் துன்புறுத்தப்பட்டுள்ளேன். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜராகி, “மருத்துவ காரணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்.
செந்தில் பாலாஜி, அவரது மனைவி ஆகியோரின் வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு விவரங்களை ஆய்வு செய்து அமலாக்கத்துறை அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளது. இதனை மனுவிலும் குறிப்பிட்டுள்ளது.
29.7.2021 அன்று அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதன்பின்பு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் திடீரென நடவடிக்கை எடுப்பதற்கான நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்று அமலாக்கத்துறைக்கு நன்றாக தெரியும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய பாஜக அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்து உள்ளதால் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது” என்று வாதிட்டார்.
அமலாக்கத் துறை சார்பில் துணை இயக்குனர் கார்த்திக் தசாரி ஆஜராகி, செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தது முதல் கைது செய்யப்பட்டது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அவரது விளக்கம் வாக்குமூலமாக பெறப்பட்டது.
அமலாக்கத்துறை சார்பில் மத்திய கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், வழக்கறிஞர் ரமேஷ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது உண்மையை கண்டறிய செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும். அவருக்கு என்ன மருத்துவ சிகிச்சை தேவையோ அதனை அமலாக்கத்துறை சார்பில் மருத்துவக் குழு வழங்கும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்த பிறகு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு நேற்று மாலை இவ்வழக்கில் நாளை (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அல்லி அறிவித்தார்.
அதன்படி இன்று தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுமா அல்லது அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரியா
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கேரட் அவியல்