அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 23-ஆம் தேதி வரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூன் 16) உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட மனுவையும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவையும் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி விசாரித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜி காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி, அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். நீதிமன்ற காவலில் செல்ல இயலாது என்று தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஜூன் 23-ஆம் தேதி வரை 8 நாட்கள் அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து மருத்துவமனையில் வைத்து விசாரிக்க வேண்டும். மருத்துவமனையிலிருந்து விசாரணைக்காக அவரை வெளியே அழைத்து செல்ல கூடாது. மீண்டும் செந்தில் பாலாஜியை ஜூன் 23-ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.