சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவுக்கு பிறகு ஜாமீன் கோரிய வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் நேற்று நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, “அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். காவேரி மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அமலாக்கத் துறை சார்பில், ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், “எங்கள் தரப்பிடமும் மருத்துவக் குழு உள்ளது. தற்போதே அவர், பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர், திடீரென உடல் நலக்குறைவு என்று கூறுகிறார். செந்தில் பாலாஜிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி வழக்கை நாளை (இன்று) ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூன் 15) மீண்டும் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவுக்கு பிறகே ஜாமீன் கோரிய மனு, அமலாக்கத் துறை காவல் கோரிய மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை காணொளி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்த திட்டமிட்டுள்ளது.
கைது நடவடிக்கையில் நடந்த விவரங்கள் தொடர்பாக நீதிபதி காணொளி காட்சி மூலம் கேட்டறிய உள்ளார்.
பிரியா
இந்தோனேஷியா ஓபன்: காலிறுதிக்கு இந்திய வீரர்கள் முன்னேற்றம்!
“கடந்த கால டிராமாக்கள் போல் இது அல்ல” : துரை வைகோ