சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் இன்று (ஆகஸ்ட் 14) சில விளக்கங்களை கேட்டுள்ளனர்.
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற்ற இறுதிவிசாரணையின் போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி,
“ஜாமீன் கோரி ஒருவர் மனுத்தாக்கல் செய்கிறார் என்றால், அதற்கான முகாந்திரங்களை பார்க்க வேண்டி உள்ளது. விசாரணை நிறைவு பெறும் வரை ஒருவரை சிறையில் வைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் கூறி உள்ளது.
மனுதாரர் 300 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். அவர் இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமைச்சர் மற்றும் அதிகாரத்தில் இல்லாததால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி மீதான விசாரணை 3 மாதங்களில் முடிவடையும் என்றும் தமிழ்நாடு அரசு வழக்கு விசாரணையை தாமதப்படுத்துகிறது என்றும் வாதிட்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “13 மாதங்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் எப்போது தான் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கும்?
செந்தில் பாலாஜி ஓராண்டாக சிறையில் உள்ளதால் அவரது ஜாமீன் மனு மீது முதலில் முடிவெடுக்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு இன்று காலை பட்டியலிடப்பட்டு இருந்த நிலையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு ஒரு வழக்கில் ஆஜராகியிருந்தார். இதனையடுத்து நீதிபதி ஓகா, “இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துவிட்டோம். ஆனால், வழக்கில் சில விளக்கங்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது.
போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மூன்று வழக்குகளையும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரிக்கப்போகிறதா அல்லது 1000-க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்ட வழக்கை தவிர்த்துவிட்டு செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை மட்டும் விசாரிக்கப்போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கறிஞர் சோகிப் ஹூசைன் ஆகியோர் வேறு நீதிமன்றத்தில் இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி ஓகா இன்றைய தினம் இறுதி வழக்காக விசாரிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போர் செல்லும் வீரன்: சிவகார்த்திகேயனின் அமரன்… மிரட்டும் மேக்கிங் வீடியோ!