முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 20) தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
இன்றைய தினம் காலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத் துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வருவதற்கு தாமதமாகும் எனக் கூறி, இவ்வழக்கை கடைசி வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், எத்தனை முறைதான் அவகாசம் கேட்பீர்கள்…. இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என்று கூறினர்.
எனினும் சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கையை ஏற்று இன்று கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி ஓகா தெரிவித்தார்.
இந்தநிலையில் மதிய இடைவெளிக்கு பின் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது, செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை மட்டும் அமலாக்கத் துறை விசாரிக்க உள்ளதா? அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரிக்க உள்ளதா?. அதாவது, செந்தில் பாலாஜி மீதான மூன்று வழக்குகளில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேல் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கையும் விசாரிப்பீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆம், அனைத்தும் விசாரிக்கப்படும் என்று அமலாக்கத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து அமலாக்க துறையின் பதில்கள் கொண்ட குறிப்புகளை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை மீண்டும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தனர்.
இன்னும் இரு தினங்களில் பெயில் கிடைத்துவிடும் என்று செந்தில் பாலாஜி தரப்பினர் நம்பிக்கையில் இருக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
முதல்வர் தனிச் செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
கழிவறை , உடை மாற்றும் அறை கூட நடிகைகளுக்கு கிடையாது : அதிர வைக்கும் ஹேமா அறிக்கை