சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011 – 2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்தநிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
வழக்கின் விசாரணையின் போது, “போக்குவரத்துத் துறையில் செந்தில் பாலாஜி லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த மூன்று வழக்குகளையும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரிக்கப் போகிறதா அல்லது 1,000-க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்ட வழக்கைத் தவிர்த்துவிட்டு மற்ற இரண்டு வழக்குகளை மட்டும் விசாரிக்கப் போகிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த வழக்கில் மொத்தம் 47 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியங்களாக இருக்கிறார்கள். பல பிரிவுகளிலும் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெறப்பட்டிருக்கிறது.
எனவே முக்கிய குற்றப்பத்திரிகை குறித்து தனித்தனியாக விசாரிக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் செந்தில் பாலாஜி சாட்சியங்களை கலைக்கிறார் என்பதற்கு எங்களிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர், “ஒரே வழக்கை தனித்தனியான சாராம்சங்களாக பிரித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிடுகிறது. இது சட்ட விதிகளுக்கு எதிரானது” என்று வாதிட்டார்.
அமலாக்கத்துறை கூறுகிற படி வழக்கை தனித்தனியாக விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும், அதன் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் விசாரணையின் போது தெரிவித்தனர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை… அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அலர்ட்!
டாப் 10 நியூஸ்: ஸ்டாலின் டெல்லி பயணம் முதல் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு வரை!