சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28) தள்ளுபடி செய்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த 8 மாதங்களாக அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை மூன்று முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், ஒரு முறை சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடைபெற்று வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி,
“செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட HP ஹார்ட் டிஸ்க் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதற்கு அமலாக்கத்துறையிடம் தகுந்த பதில் இல்லை. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அமைச்சராக இருப்பதால் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற அமலாக்கத்துறையின் வாதம் தற்போது செல்லாததாகிவிட்டது” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜராகி,
“டிஜிட்டல் ஆவணங்கள் திருத்தப்பட்டதாக செந்தில் பாலாஜி தரப்பு கூறும் குற்றச்சாட்டு தவறானது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், இன்னும் செல்வாக்கு மிக்கவராகவே இருக்கிறார்.
ஜாமீனில் வெளியே வரும் பட்சத்தில் சாட்சிகளை கலைக்கக் கூடும். அதனால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க கூடாது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளாரே தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தள்ளுபடி செய்தார். மேலும், விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காசா போரை நிறுத்த விரும்பும் இஸ்ரேல்: ஜோ பைடன் அறிவிப்பு!
பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு!