செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து 200 நாட்களுக்கும் மேலாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று முறை மனு தாக்கல் செய்தார். மூன்று முறையும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார்.
மருத்துவ காரணங்களை கூறி உச்ச, உயர் நீதிமன்றங்களில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்ய மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜனவரி 30) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒரு சாதாரண அரசு ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். 200 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது ஏன்? மக்களுக்கு அரசு என்ன சொல்ல வருகிறது?
ஒரு நீதிபதி கிரிமினல் வழக்கில் சிக்கினால், அவர் நீதிபதியாக இருக்க அனுமதிக்கலாமா? என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இந்து அல்லாதவர்கள் பழனி கோயிலுக்குள் செல்ல தடை!
வான்வெளி, பாதுகாப்பு, மருத்துவ துறை : ஸ்பெயின் முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு!