செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 24-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

Published On:

| By Selvam

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 22) மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.ஓஹா, ஏ.ஜி.மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, “பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ததால் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அமலாக்கத்துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் விசாரணை தொடங்கவில்லை.

சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாக கூறும் கோப்புகள் இல்லை. இதனால் செந்தில் பாலாஜிக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒருவரை நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சரியில்லாதவர் என்று கூற முடியுமா?” என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜூலை 24-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஒத்திவைத்தனர்.

செல்வம்

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel