பாஜகவில் ஜாமீன் அமைச்சர்கள் இல்லையா? – அண்ணாமலையை அட்டாக் செய்த செந்தில் பாலாஜி

Published On:

| By Selvam

ஜாமீனில் வெளியே வந்த எத்தனை பேர் பாஜகவில் அமைச்சர்களாக இருக்கிறார்கள்? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (டிசம்பர் 8) கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “முதல்வர் ஸ்டாலின் அதானியை சந்திக்கவில்லை என்று அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பிறகும் அந்த அறிக்கையின் மீது அண்ணாமலை சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.

அந்த அறிக்கையை ஒருமுறை படித்து தெரிந்துகொள்ளலாம். புரியவில்லையென்றால் பலமுறை படித்து தெரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். அப்படியும் புரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்கலாம்.

ஆனால், அந்த அளவுக்கு பக்குவமும் அறிவுத்திறனும் அண்ணாமலைக்கு இல்லை. அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜாமீன் அமைச்சர் என்று குறிப்பிட்டிருந்தார். பாஜகவில் ஜாமீனில் வெளியே வந்த எத்தனை பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள்?

அதானி நிறுவனத்துடன் தமிழக அரசு தொழில் ரீதியாக எந்த வர்த்தக உறவுகளும் வைத்திருக்கவில்லை. ஆனால், தமிழக அரசு அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது போல ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சி ஒருபோதும் எடுபடாது.

அண்ணாமலையின் அறிக்கைகளையோ அவரது விமர்சனங்களையோ கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. சொல்லக்கூடிய கருத்து சரியாக இருந்தால், அதை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வோம்.

அண்ணாமலையுடன் 11 பேர் வெளிநாடு சென்று படித்தார்கள். சேலம் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ரோஹினியும் போய் படித்தார். ஆனால், அவர் குறித்து யாரும் செய்திகள் வெளியிடவில்லை.

யாரும் படிக்காத ஒரு படிப்பை அண்ணாமலை படித்து வந்தது போலவும், அதனால் சமூகத்தில் பெரிய மாற்றம் ஏற்படுவது போலவும் அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. எந்த இடத்திலும் மக்கள் செல்வாக்கு இல்லாத ஒரு நபர்களுக்கு மீடியா முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடுகின்றன” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிங்கிள் பாய்ஸ் & கேர்ள்ஸ்க்கு டேட்டிங் அப்ளிகேஷன்கள்!

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கையா? – திருமா விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.