அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சி முறை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தொடர் விசாரணை நடைபெற்றது.
அப்போது அவர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு தமிழக அமைச்சர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஜூன் 14) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது எதிர்பார்த்ததுதான். கைது என்றால் நெஞ்சுவலி வருவதையெல்லாம் நிறைய தெலுங்கு படத்தில் பார்த்துள்ளோம். அப்படியென்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சுவலி வர வேண்டும்.
தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற பல வேலைகளை செய்வார்கள். தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல் செயல்படுகின்றன. என்னை பிடிக்கவில்லை என்றால் நாளை என் வீட்டிலும் ரெய்டு வரலாம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சி முறையாகும். இந்த அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி இல்லை இது கொடுங்கோலாட்சி முறை.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் குணமாகி வர வேண்டும். மத்திய அரசு மிரட்டி அச்சுறுத்தும் பாணியில் பணிய வைக்கும் முறைகளில் இதுவும் ஒன்று” என கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
செந்தில் பாலாஜியை பரிசோதிக்கும் எய்ம்ஸ் நிபுணர்கள்?