“சீண்டிப் பார்க்காதீர்கள்” : பாஜக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

அரசியல்

தி.மு.க. நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள் என்று பாஜக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அமலாக்கத் துறை அநியாயமாக செயல்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னாள் இருக்கக்கூடிய புகார் தொடர்பாக 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் இதய நோயை உண்டாக்கியிருக்கிறார்கள். இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?

செந்தில் பாலாஜி மீது புகார் இருக்குமானால், நீதிமன்றத் தீர்ப்பு இருக்குமானால் அவரை அழைத்து விசாரணை நடத்தினால் அது தவறல்ல. அவர் ஓடி ஒளிந்து கொள்ள கூடிய அளவுக்கு சாதாரணமானவர் அல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் செந்தில் பாலாஜி. 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். இரண்டாவது முறையாக அமைச்சராக இருக்கிறார். நாள்தோறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளக் கூடியவர்.

அப்படிப்பட்டவரை தீவிரவாதி போல அடைத்துவைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது. அமலாக்கத் துறை விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுத்தார். எந்த ஆவணங்களை எடுத்தாலும் அதற்கு விளக்கமளிக்க தயார் என்று சொன்னார். இருந்தாலும் 18 மணி நேரம் அடைத்து வைத்தார்கள். யாரையும் சந்திக்கவிடவில்லை.

இறுதியாக முழுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, இதய வலி ஏற்பட்ட பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். இதிலும் அலட்சியம் காட்டியிருந்தால் அவரது உயிருக்குக் கூட ஆபத்து ஆகியிருக்கும்.

இப்படி ஒரு விசாரணை நடத்தும் அளவுக்கு அப்படி என்ன எமர்ஜென்சி? அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா? அமலாக்கத் துறையின் நடவடிக்கை அப்படிதான் இருக்கிறது.

பாஜக அமலாக்கத் துறை மூலமாக தனது அரசியலை செய்ய நினைக்கிறது. மக்களை சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. பாஜகவை நம்ப மக்கள் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால் தான் அவர்கள் பாஜகவை நம்புவார்கள். பாஜக அரசியல் என்பது மக்கள் விரோத அரசியல்.

கருத்தியல் ரீதியாக, அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்கள் சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை மூலம் மிரட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு ஸ்கிரிப்டுதான். அதை எல்லா மாநிலத்திலும் டப்பிங் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிவசேனா எதிர்க்கிறதா, அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தை கைது செய்ய வேண்டும். இது மகாராஷ்டிரா. ஆம் ஆத்மி எதிர்க்கிறதா? டெல்லி மாநில அமைச்சர் மணீஷ் சிசோடியாவை கைது செய்ய வேண்டும். இது டெல்லி.

ராஷ்டிரிய ஜனதா தளம் எதிர்க்கிறதா? பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்ய வேண்டும்? இது பீகார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பாஜகவை எதிர்க்கிறார். உடனே அவரது கட்சிக்காரர்கள் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்த வேண்டும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை கைது செய்தார்கள். அவர் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இன்று துணை முதல்வராகிவிட்டார். ப.சிதம்பரத்தை கைது செய்தார்கள். டெல்லியில் அமைச்சருக்கு தொடர்பான இடங்களில் ரெய்டு.

ஆனால் உத்தரப் பிரதேசத்தில், மத்திய பிரதேசத்தில் எல்லாம் ரெய்டு நடக்காது. ஏனென்றால் அங்கெல்லாம் இருப்பது உத்தம புத்திரன் பாஜக. அந்த மாநிலங்களை எல்லாம் வருமான வரித்துறைக்கோ, அமலாக்கத் துறைக்கோ, சிபிஐக்கோ தெரியாது.

பாஜகவை எதிர்க்கிற எல்லா கட்சியினரின் முக்கிய பிரமுகர்கள் வீட்டுக்குள் பாஜகவின் துணை அமைப்புகள் சென்றுவிட்டன. அப்படி இல்லை என்றால் விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டி அதிமுகவை போன்று அடிப்பணிய வைத்துவிடுவார்கள்.

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக, அமலாக்கத் துறை மொத்தமாக 112 ரெய்டுகள் மட்டுமே நடத்தியிருக்கின்றன. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சிகள் மீது 3000 ரெய்டுகள் நடத்தியிருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்னவோ 0.05 சதவிகிதம் தான், மற்றவை எல்லாம் உருட்டல் மிரட்டல் தான்.

இப்படி ரெய்டு மிரட்டலுக்கு உள்ளானவர்கள் பாஜகவில் சேர்ந்த பிறகு புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். இவர்கள் மீது வழக்குகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சசி தரூர் ஒரு பட்டியலை போட்டிருக்கிறார். அதற்கு உதாரணம் அதிமுகதான்.

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை கொத்தடிமையாக ஆக்குவதற்கு 2016,2017,2018ஆம் ஆண்டுகளில் இதே பாஜக ஆட்சி ரெய்டு நடத்தியது. ஆனால் எந்த வழக்கையாவது நடத்தினார்களா? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்களா? தண்டனை வாங்கிக் கொடுத்தார்களா? இல்லையே.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நிறைய வழக்குகள் இருக்கிறது. அதன் மீது விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துகொண்டிருக்கிறோம். இதில் எல்லாம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த ஏன் வரவில்லை?. எல்லா ஆதாரங்களையும் நாங்கள் தருகிறோம். அமலாக்கத் துறை விசாரணை நடத்த தயாரா?

இந்த ஊழல் வாதிகளைத் தான் மொத்தமாக டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். ஊழலுக்கு எதிராக தமிழ்நாட்டுக்கு வந்து முழங்கிவிட்டு போயிருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை கொத்தடிமை கூடாரமாக மாற்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தியது பாஜக. அவர்களும் பயந்து போய் பாஜக காலடியில் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமி செந்தில் பாலாஜியை பற்றி பேசுகிறார்.

ஆனால் 2021 வரை அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. அப்போது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்கள். 4000 கோடி ரூபாய் டெண்டர் புகாரில் உயர் நீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. உடனடியாக உச்ச நீதிமன்றத்துக்கு ஓடியவர் பழனிசாமி. அவருக்கு ஊழலை பற்றி பேச அருகதை அல்ல.

அதிமுகவை போன்று மற்றக் கட்சிகளையும் பாஜக நினைக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட கட்சி அல்ல திமுக. இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது. சுவற்றில் அடித்த பந்து, மீண்டும் வந்து முகத்தில் அடிப்பது போலத்தான் ஒவ்வொரு திமுககாரர்களும் பழக்கப்பட்டிருக்கிறார்கள்.

நேற்றிலிருந்து திமுக உடன்பிறப்புகள் ஒரு வீடியோவை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில், ‘என்னை யாரும் அடிக்க முடியாது. நியாபகத்தில் வைத்துகொள், நான் திரும்பி அடித்தால் தாங்க முடியாது’ என கலைஞர் பேசியிருக்கிறார். அப்படிப்பட்ட கலைஞரால் வளர்க்கப்பட்டர்வர்கள் நாங்கள்.

எங்களுக்கு என்று தனித்த கொள்கை கோட்பாடு இருக்கிறது. மதவாதம், சாதிவாதம், சனாதனம், பிறப்பால் உயர்வு தாழ்வு போன்ற மனித சமுதாயத்துக்கு, துரோகமான பிற்போக்கு எண்ணத்துக்கு எதிரானவர்கள் நாங்கள்.

இந்த சக்திகளை அரசியல் களத்தில் எதிர்கொள்வதுதான் எங்களது வழக்கம். வாதங்களுக்கு வாதங்கள் வைக்க தயாராக இருக்கிறோம். அதை தவிர்த்து மிரட்டி பணிய வைக்க நினைத்தால் குனியமாட்டோம். நிமிர்ந்து நிற்போம்.

நாங்கள் ஆட்சிக்காக மட்டும் கட்சி நடத்துபவர்கள் இல்லை. நாங்கள் கொள்கைக்காகக் கட்சி நடத்துகிறவர்கள். கொள்கைகளைக் காப்பாற்றத்தான் போராடுவோம். திராவிட வரலாறே இதற்கு சாட்சி.

ஆதிக்க மனோபாவத்துடன் எதிர்த்தால், கொள்கைப் பட்டாளத்துடன் உறுதியோடு தடுப்போம். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், மிசா காலம் என, நாங்கள் நடத்தாத போராட்டங்கள் இல்லை. நாங்கள் பார்க்காத அடக்குமுறைகள் இல்லை, தி.மு.க. நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இல்லை என்றால் டெல்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். சீண்டிப் பார்க்காதீர்கள்.

தி.மு.க.வையோ தி.மு.க.காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை!

எனவே, ஒன்றிய அரசாங்கத்தை ஆள்கிற பொறுப்பில் உள்ள பா.ஜ.க.
அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

எதேச்சாதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்தி கொள்ள வேண்டும். 2024 தேர்தல் களம் காத்துக்கொண்டிருக்கிறது. தேர்தல் களத்தில் சந்திப்போம். கழக உடன் பிறப்புகளே நாற்பதிலும் வெல்வோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்

பிரியா

எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும்- அமலாக்கத்துறை மனு!

பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *