அமைச்சர் செந்தில்பாலாஜியின் அரசு இல்லத்தில் நேற்று முதல் அமலாக்கத்துறை நடத்திய தொடர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேர சோதனைக்கு பிறகு… இன்று நள்ளிரவு 2.30 மணிக்கு அவரை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல தயாரான நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி.
அங்கே கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே திமுகவின் மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான என். ஆர். இளங்கோ, “ஊடகங்களில் தான் செந்தில் பாலாஜி கைது என்று சொல்கிறீர்கள். ஆனால் அமலாக்கத்துறை அவரை கைது செய்ததற்கான எந்த ஆவணத்தையும் இதுவரை வழங்கவில்லை. அவரது குடும்பத்தினரிடமும் இது பற்றிய எதுவும் தெரிவிக்கவில்லை” என்று இன்று அதிகாலை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் கூறினார்.
இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது கணவரை அமலாக்கத்துறை அழைத்துச் சென்றிருப்பதாகவும் அவர் பற்றி தகவல் ஏதும் தனக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று பிற்பகல் 2:15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்த நிலையில்… வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிகளில் ஒருவரான சக்திவேல் வழக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பதற்காக நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்தார்.
இதற்கிடையே ஆட்கொணர்வு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பட்சத்தில்… செந்தில் பாலாஜியின் நிலை என்ன என்பது குறித்தான தகவலை உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அமலாக்க துறைக்கு ஏற்பட்டது.
இதனால், அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லியை அவரது சேம்பரிலேயே இன்று பிற்பகல் 2. 10 மணிக்கு சந்தித்தார்.
ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரும்போது செந்தில் பாலாஜி பற்றிய சட்டரீதியான நிலையை அமலாக்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் இப்போது செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை உள்ளது. எனவே நீதிபதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் அமலாக்கத்துறை சார்பில் முதன்மை நீதிமன்ற நீதிபதியிடம் வைக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
பொதுவாகவே கைது செய்யப்படுபவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் அல்லது நீதிமன்ற நேரம் முடிந்திருக்கும் பட்சத்தில் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவல் உத்தரவு அல்லது கஸ்டடி உத்தரவு பெறுவார்கள். ஆனால் செந்தில்பாலாஜியை நீதிமன்றத்தில் தற்போது ஆஜர்படுத்த இயலாததால்… நீதிபதியை மருத்துவமனைக்கு வருமாறு கோரிக்கை வைத்தது அமலாக்கத்துறை.
இந்த நிலையில்தான் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று பிற்பகல் 3.25 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர் செந்தில் பாலாஜியை பார்வையிட்டு அமலாக்கத்துறை அவரை கைது செய்திருப்பதற்கான ஆவணங்களின்படி முடிவெடுப்பார் என்று தெரிகிறது.
இதற்கிடையே செந்தில்பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை நாளை காவேரி மருத்துவமனையில் நடக்க இருப்பதாகவும், அதனால் அவர் இன்றே அம்மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுவார் என்றும் ஓமந்தூரார் மருத்துவமனை வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
வேந்தன்
“ஜெயலலிதா பற்றி பேச எனக்கு அருகதை இல்லை” – அண்ணாமலை
கொஞ்சம் காதல்… நிறைய நகைச்சுவை: ’தீயா வேலை செய்யணும் குமாரு’