செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது மற்றும் நீதிமன்ற காவல் இயந்திரத்தனமானது என்று மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதங்களை முன்வைத்துள்ளார்.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது கடந்த ஜூன் 22 ஆம் தேதி உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்களை கேட்ட பிறகு விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தது.
தொடர்ந்து இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி முன்பு மீண்டும் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி மனைவி தரப்பில், முதல் 20 நிமிடங்கள் வாதாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் வாதாடுவதற்கு அனுமதித்தனர்.
இதனையடுத்து அமலாக்கத்துறையின் பதில் மனுவிற்கு பதில் அளிக்கும் வகையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, “செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு கைது செய்த நிலையில் ஜூன் 16 ஆம் தேதி தான் அதற்கான சம்மன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே செந்தில் பாலாஜியை கைது செய்ததே சட்டவிரோதமானது. நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜியை வைத்தது இயந்திரத்தனமானது. கைது மெமோவில் கையெழுத்திட செந்தில் பாலாஜி மறுத்தார் என்பதற்கு அமலாக்கத்துறையிடம் என்ன ஆதாரம் உள்ளது” என்றார்.
தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா காணொலி காட்சி வாயிலாக வாதங்களை முன்வைத்து வருகிறார்.
மோனிஷா
ஞானதிரவியம் எம்.பி மீது வழக்குப்பதிவு!
இளநிலை மருத்துவ படிப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!