மஸ்தான் மாற்றம்: விசித்திர பின்னணி!

Published On:

| By Aara

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் செஞ்சி மஸ்தான் வகித்து வந்த விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அவர் அகற்றப்பட்டு, அவருக்கு பதிலாக மாவட்ட அவைத் தலைவராக இருந்த டாக்டர் சேகர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதற்கான அறிவிப்பு ஜூன் 11 ஆம் தேதி திமுக பொதுச் செயலாளரால் வெளியிடப்பட்டது,

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்தவரும், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவருமான புகழேந்தி 2024 ஏப்ரல் 6 ஆம் தேதி காலமானார். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் என ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்துதான் விக்கிரவாண்டி தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி நியமிக்கப்பட்டார்.

இதன் சைடு எஃபெக்ட் ஆகத்தான் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் மஸ்தான் மாற்றப்பட்டார் என்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட திமுகவினர்.

“விக்கிரவாண்டியை உள்ளிட்ட விழுப்புரம் தெற்கு மாசெ.வாக இருந்த புகழேந்தி வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் காலமானதால் ஏற்பட்ட காலியிடத்துக்கு மாவட்டப் பொறுப்பாளராக பொன்முடியின் அழுத்தம், மற்றும் உதயநிதியின் ஆதரவின் பேரில் முன்னாள் கள்ளக்குறிச்சி எம்.பி. கௌதம சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனென்றால்  விழுப்புரம் நான்கு ரோடு சிக்னலில் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்தில் பேசியபோது,    “அமைச்சர் பொன்முடிக்கு கௌதம் சிகாமணி மட்டும் மகனல்ல.  நானும் ஒரு மகன்தான். சிறு வயதில் என்னைத் தூக்கி வளர்த்தவர்.  அதனால் கௌதம் சிகாமணிக்கு ஒரு பிரச்சினை என்றால் விடமாட்டோம்”  என்று சென்டிமென்ட்டாக  பேசினார்.

அப்போதே கௌதம் சிகாமணியிடம் வருங்கால மாவட்ட செயலாளரே வாங்க என்றும் கூறினார் உதயநிதி.

5 பேர் படமாக இருக்கக்கூடும் அங்கே மாவட்டப் பொறுப்பாளராக ஒரு வன்னியர்தான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பொன்முடி மகன் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்லர்.

தெற்கு மாவட்டத்துக்கு வன்னியரை நியமிக்க முடியாததால்… விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் மஸ்தானை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் ஒரு வன்னியரை நியமிக்க முடிவு செய்தது தலைமை.

ஏனெனில் விழுப்புரம் தெற்கு, வடக்கு இரு மாவட்டங்களிலும் வன்னியர் அல்லாத மாவட்டச் செயலாளர்களை திமுக வைத்திருந்தால், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் இதையே பாமக ஒரு பிரச்சினையாக கிளப்பும்.

அதனால் விழுப்புரம் தெற்கு உடையார் சமுதாயத்தைச் சேர்ந்த கௌதம சிகாமணிக்கு போய்விட்ட நிலையில்… டாக்டர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரத்தை உள்ளடக்கிய விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக, மஸ்தானுக்கு பதில் ஒரு வன்னியரை நியமிப்பது என தலைமை முடிவு செய்தது.

இந்தத் தகவல் மஸ்தானுக்கும் தெரிவிக்கப்பட்டு, ‘உங்களுக்கு பதில் ஒரு வன்னியரை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். உங்கள் ஆதரவாளரையே சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே மஸ்தான் மீது உட்கட்சி ரீதியாக சில புகார்களும் தலைமைக்கு சென்றிருக்கின்றன.

11 பேர் மற்றும் உரை படமாக இருக்கக்கூடும்

இந்த நிலையில் மஸ்தான் தனது தீவிர ஆதரவாளரான மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகரை பரிந்துரைத்திருக்கிறார். இந்த நிலையில் சேகர் ஒரு வன்னியர் என்ற அடிப்படையில் மட்டுமே அவர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மஸ்தான் மீது ஏற்கனவே சில புகார்கள் இருக்கின்றன. அந்த புகார்களுக்காக அவர் அமைச்சரவையில் இருந்தே மாற்றப்படலாம் என்று ஒரு பேச்சு வந்தது. ஆனால் அமைச்சரவையில் இருக்கும் ஒரே முஸ்லிம் அமைச்சர் மஸ்தான் தான். அவரையும் மாற்றிவிட்டால் முஸ்லிம் இல்லாத ஸ்டாலின் அமைச்சரவை என்ற விமர்சனங்கள் எழும். எனவே அவர் அமைச்சரவையில் இருந்து மாற்றப்படவில்லை.

மஸ்தான் முஸ்லிமாக இருக்கும் ஒரே காரணத்துக்காக அமைச்சரவையில் தொடர்கிறார். வன்னியராக இல்லாத காரணத்துக்காகவே மாவட்டச் செயலாளராக தொடர முடியவில்லை. இதெல்லாம் என்ன நடவடிக்கையோ” என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

இதுமட்டுமல்ல… “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் செஞ்சி மஸ்தானின் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் திண்டிவனம் தொகுதி மட்டும் வரும். அந்த தொகுதியில் 26 ஆயிரத்து 346 வாக்குகள் விசிக வேட்பாளருக்கு லீடிங் எடுத்துக் கொடுத்திருக்கிறார் மஸ்தான். விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலேயே அதிக லீடிங் எடுத்துக் கொடுத்தது மஸ்தான் எல்லைக்குள் வரும் திண்டிவனம்தான்.

அதேநேரம் மாசெ புகழேந்தி மறைந்த நிலையில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தொகுதிகளை அமைச்சர் பொன்முடிதான் கவனித்துக் கொண்டார். பொன்முடி தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருக்கோவலூர் தொகுதியில் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் ரவிக்குமார், அதிமுக வேட்பாளரை விட 1898 ஓட்டுகள் குறைவாக பெற்றிருக்கிறார்.

5 பேர், மேடை மற்றும் , ’டை விரச்ம் ம் !Il பெிர புக் A’ எனச்சொல்லும் வாசகம் படமாக இருக்கக்கூடும்

இப்படி 26 ஆயிரம் ஓட்டுகள் லீடிங் எடுத்துக் கொடுத்த மாசெ மாற்றப்படுகிறார். சுமார் 2 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக எடுத்தவரின் மகன் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

தேர்தலுக்கு முன்னர் மாசெக்கள் கூட்டத்தில், ‘ஓட்டு குறைந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால் இப்போது ஓட்டு அதிகரித்தால் நடவடிக்கை எடுக்கிறார். விழுப்புரம் விசித்திரமாக இருக்கிறது” என்கிறார்கள் சிரித்துக் கொண்டே.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி. வேந்தன்

வாரணாசியில் மோடியின் வெற்றி மோசடியானது : உபி பாஜக உறுப்பினர் வீடியோ வைரல்!

மாணவர்களுக்கு கல்வி கடன் 5 லட்சமாக உயர்வு!