இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (அக்டோபர் 1) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.நல்லகண்ணு, வயது மூப்பு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வருகிறார். 75வது சுதந்திர தினவிழாவில் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகைசால் தமிழர் விருதை வழங்கி சிறப்பித்தார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.நல்லகண்ணு, தனக்கு விருதுடன் கிடைத்த 10 லட்சம் ரூபாய் பணத்தை தமிழ்நாடு அரசின் பொது நிவாரண நிதிக்கே திருப்பி கொடுத்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் நல்லகண்ணு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்புக்கு பிறகு அவருக்கு காய்ச்சல் குணமடைந்து வீடு திரும்பினார்.
வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், இன்று (அக்டோபர் 1) ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெ.பிரகாஷ்
மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி!
மேயரைப் பற்றி ஆபாச வீடியோக்கள்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?