வைஃபை ஆன் செய்ததும் இன்று (பிப்ரவரி 10) காலை அதிமுகவின் சீனியர் தலைவர் செங்கோட்டையன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ காட்சி இன்பாக்சில் வந்து விழுந்தது. Sengottaiyan Vs Edapadi reason Vijay
அதைத் தொடர்ந்து சில உரையாடல்களை நிகழ்த்திவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.’
செங்கோட்டையன் புறக்கணிப்பே பேச்சு! Sengottaiyan Vs Edapadi reason Vijay
“கொங்கு பூமியின் கனவுத் திட்டமான அவினாசி-அத்திக் கடவு திட்டத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுத்த நடவடிக்கைகளுக்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விவசாய அமைப்புகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் அன்னூரில் 9 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிமுகவின் சீனியர் மோஸ்ட் தலைவரும் அவினாசி அத்திக்கடவு திட்டத்தால் பயன்பெறும் கோபி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதனால் எடப்பாடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா என்ற பேச்சு போய், செங்கோட்டையன் புறக்கணிப்பு என்பதே பேச்சாகிப் போனது.

அதிமுகவுக்குள் நேற்றில் இருந்தே இது விவாதமாகிய நிலையில், இன்று (பிப்ரவரி 10) காலை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் செங்கோட்டையன். அப்போது அவரிடம் அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்காக எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த கூட்டத்தை புறக்கணித்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
ஜெயலலிதா படம் இல்லை, எடப்பாடி படம் இருக்கு!
அதற்கு பொறுமையாக பதிலளித்த செங்கோட்டையன், ‘இந்த கனவுத் திட்டத்துக்கு 2011 இல் ஜெயலலிதா 3 கோடியே 75 லட்சம் ஒதுக்கினார். அப்போது பொதுப் பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் இந்த திட்டம் பற்றி தொடர்ந்து கவனித்து வந்தார். அதன் பின் எடப்பாடி ஆட்சியில் பெரும்பாலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு 3 நாட்கள் முன்பு என்னை விவசாய குழுவினர் நான்கு பேர் சந்தித்தார்கள். நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் தந்தார்கள். அந்த அழைப்பிதழில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இல்லை, என்னுடன் ஆலோசித்திருந்தால் சொல்லியிருப்பேன், ஆலோசிக்காமல் 3 நாள் முன்பு வந்து சொல்கிறீர்கள் என்று அவர்களிடம் கூறினேன். நான் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தேன் என்பதை விட என் உணர்வை வெளிப்படுத்தினேன்’ என்று பதிலளித்தார் செங்கோட்டையன்.

அவர் புறக்கணித்ததை விட அவரது இந்த பேட்டி அதிமுகவுக்குள் மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமிக்கான பாராட்டு விழாவாக மட்டுமே இது இருக்கக் கூடாது. அவினாசி அத்திக் கடவு திட்டத்துக்கு 14 ஆண்டு காலம் முன்பே நிதி ஒதுக்கிய ஜெயலலிதாவை புறக்கணித்துவிட்டார்கள். எம்.ஜி.ஆரை புறக்கணித்துவிட்டார்கள் என்ற தோற்றத்தை செங்கோட்டையனின் பேட்டி வெளிப்படுத்துகிறது.
வேலுமணியை விட குறைந்துபோய்விட்டேனா?
இது மட்டுமல்ல… அந்த அழைப்பிதழில் வேலுமணிக்கு அடுத்து செங்கோட்டையன் பெயரை விழாக் குழுவினர் போட்டிருந்தார்கள். இதுகுறித்தும் அவர்களிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் செங்கோட்டையன்.
அவினாசி அத்திக் கடவு திட்டத்துக்காக, தான் என்னென்ன பாடுபட்டிருக்கிறேன் என்பதையெல்லாம் சொன்ன செங்கோட்டையன், ‘அந்த திட்டத்தால் கோபி பயன்பெறும். ஆனால் வேலுமணியின் பகுதிக்கும் அவினாசி அத்திக் கடவுத் திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? வேலுமணியின் ஏற்பாட்டில் விழா ஏற்பாடு செய்து திட்டமிட்டே என்னை அவமதிக்கிறீர்கள்’ என்றும் விழாக் குழுவினரிடமும் வெடித்திருக்கிறார். Sengottaiyan Vs Edapadi reason Vijay
இது தொடர்பாக எடப்பாடி தரப்பிலும் இருந்து தன்னை தொடர்புகொள்ளாததால் கோபத்தில் இருந்த செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டதும் போட்டு உடைத்துவிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் கடலூரில் நடந்தபோது அதில் பேசிய செங்கோட்டையன், ‘அதிமுக இப்போது ஆக்டிவ் ஆன எதிர்க்கட்சியாக இல்லை’ என்று வெளிப்படையாகவே தனது வேதனையை சொன்னார். அதற்கு உதாரணமாக தன் காலத்து சட்டமன்ற நிகழ்வுகளை எடுத்துக் காட்டினார்.

விஜய்க்கு சொல்லப்பட்ட அதீத ஆசை வார்த்தைகள்!
மேலும் விஜய் உடன், தற்போது எடப்பாடி தரப்பு கூட்டணிக்காக பேசிக் கொண்டிருப்பது தொடர்பாகவும் செங்கோட்டையனுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, ‘விஜய்க்கு எடப்பாடி தரப்பில் இருந்து சில ஆசை வார்த்தைகள் வீசப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். போல விஜய் இப்போது அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில்… இயற்கையாக அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால்தான் பிற்காலத்தில் அதிமுகவே விஜய் கைக்குள் வந்து தமிழ்நாட்டின் பெரிய தலைவராக விஜய் வர வாய்ப்புள்ளது’ என எடப்பாடி தரப்பில் இருந்து அவருக்கு ஆசை வார்த்தைகள் சொல்லப்பட்டுள்ளன. Sengottaiyan Vs Edapadi reason Vijay
இந்தத் தகவல்தான் கடந்த சில வாரங்களாக செங்கோட்டையன் தொடங்கி புதுக்கோட்டை விஜயபாஸ்கர் வரை அதிர்ச்சியோடு விவாதிக்கப்பட்டிருக்கிறது. ‘கூட்டணிக்காக கட்சியை விட்டுக் கொடுக்கும் அளவுக்கா ஆசை வார்த்தை பேசுவார்கள்?’ என்று முன்னாள் அமைச்சர்களிடையே பேசப்பட்டுள்ளது.
கோபி தாண்டி செங்கோட்டையனுக்கு என்ன செல்வாக்கு?
இப்படி அதிமுக சீனியர்கள் பேசிக்கொள்ளும் தகவல் எடப்பாடிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அப்போது அவர் செங்கோட்டையனை சுட்டிக் காட்டி, ‘அன்னிக்கு அவர் பெரிய ஆளா இருந்திருக்கலாம். இன்னிக்கு அரசியல்ல கோபி தாண்டி அவருக்கு ஒண்ணும் இல்லையே’ என பதிலளித்ததாகவும் செங்கோட்டையனுக்கு சிலர் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த வருத்தங்கள், கோபங்கள் எல்லாம் ஒன்றாக பொங்கித்தான் அவினாசி அத்திக் கடவு திட்ட நன்றியறிவிக்கும் நிகழ்வை தனது வடிகாலாக பயன்படுத்திக் கொண்டார் செங்கோட்டையன். இந்த வெடிப்புகள் செங்கோட்டையனோடு நிற்கப் போவதில்லை… அடுத்தடுத்து சீனியர்கள் எடப்பாடிக்கு எதிராக வாய் திறப்பார்கள் என்பதே அதிமுகவின் லேட்டஸ்ட் டெவலப்மென்ட்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்