எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 10) தெரிவித்துள்ளார்.
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளியில் அத்திக்கடவு – அவிநாசி திட்டக் கூட்டமைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று (பிப்ரவரி 9) பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் அழைப்பிதழில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பெயர் இருந்தும், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில், ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன்,
“அத்திக்கடவு அவிநாசி திட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழுவைச் சேர்ந்தவர்கள், மூன்று நாட்களுக்கு முன்பாக என்னைச் சந்தித்தார்கள். Sengottaiyan clarifies Edappadi function
எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்கள் அழைப்பிதழில் இல்லை. மேலும், இந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்களிலும் அவர்களது படங்கள் இல்லை. இதுதொடர்பாக எங்களிடத்தில் கலந்து பேசியிருந்தால், நான் அதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பேன் என்று அவர்களிடம் சொன்னேன். எனவே, ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களை வைக்க வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.
அதேநேரத்தில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு, 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா 3.72 கோடி நிதி ஒதுக்கினார். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம், இந்த திட்டத்தை ஆய்வு செய்வதற்காக உத்தரவிட்டார். இந்த பணிகளை துவங்க அடித்தளமாக இருந்த அவரது படமும் இல்லை. எனவே தான் நான் நிகழ்ச்சிக்கு செல்லவில்லையே தவிர, நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை” என்றார். Sengottaiyan clarifies Edappadi function