தன்னலம் கருதாது, இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபடக்கூடியவன் நான். என்னை சோதிக்காதீர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 12) வேண்டுகோள் விடுத்துள்ளார். sengotaiyan gobi speech goes viral
அத்திக்கடவு – அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9ஆம் தேதி பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ”விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை. எனவே எனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை” என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
இப்பிரச்சினை தொடர்பாக அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் நேற்று கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தோட்ட வீட்டில் செங்கோட்டையன் ஓய்வு எடுத்த நிலையில், அவரது வீட்டிற்கு நேற்று இரவு முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஆலோசனை கூட்டம் இல்லை!
தொடர்ந்து அந்தியூர் தொகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று காலையில் செங்கோட்டையன் வீட்டின் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேரூர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வருவதும், என்னை சந்தித்து பேசுவதும் வழக்கம் தான். நாளை அந்தியூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கான அழைப்பிதழை வழங்குவதற்காக, நிர்வாகிகள் எனது வீட்டுக்கு திரண்டு வந்துள்ளனர். மற்றபடி, நான் எந்த ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யவில்லை” என கூறி சென்றார்.

எடப்பாடிக்கு இணையாக செங்கோட்டையன்
பின்னர் இன்று மாலை ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது கவனம் பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செங்கோட்டையன் பேசுகையில், ”இன்று காலையில் கூறியபடி தான் இப்போதும் சொல்கிறேன். நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனையோ தலைவர்களை சந்தித்து விட்டு இன்றும் களத்தில் நிற்கிறேன். அதனால் ஏதாவது கிடைக்குமா என செய்தியாளர்கள் தேடி கொண்டிருக்கையில், எதுவுமே கிடைக்காது என்பது தான் நான் சொல்லும் பதில்.
நான் தெளிவாக இருக்கிறேன்
போலீஸ் பாதுகாப்பு நான் எதுவும் கேட்கவில்லை. அவர்களாக தான் வீட்டின் முன்பு குவிந்தார்கள். எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தான் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் செல்கிறேன். அவர்கள் தான் நமக்கு வழிகாட்டிகள். அவர்கள் இருவரும் தான் என்னை வாழ வைத்தவர்கள். அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. நான் புறக்கணிக்கவில்லை.
நான் தெளிவாக இருக்கிறேன். தன்னலம் கருதாது, இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபடக்கூடியவன் நான். என்னை சோதிக்காதீர்கள். அதுதான் நான் விடுக்கும் வேண்டுகோள்” என்று செங்கோட்டையன் பேசினார்.