தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நேற்று (ஜூன் 11) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, “நாம் இன்னும் தமிழகத்தில் எத்தனை காலம் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? சுயமாக நாம் வளர வேண்டாமா? பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதை தொண்டர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “தமிழகத்தில் இன்று 40-க்கு 40 வென்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திமுகவும் அதன் தலைவர் ஸ்டாலினும் தான். அதை நீங்கள் மறந்துவிட கூடாது. அதை விட்டு நான் தனியாக நிற்பேன், நான் தோற்பேன் என்றால் அது உங்கள் இஷ்டம். ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்கக் கூடாது” என்று பேசியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இன்று (ஜூன் 12) விளக்கம் அளித்துள்ள செல்வப்பெருந்தகை, “நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை கொண்டாடுகிற வகையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், வெற்றிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், காங்கிரஸ் இயக்கத்தை எப்படி வலிமைப்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பதற்காக நேற்று (ஜூன் 11) சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தொடக்கத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிற முதல் தீர்மானத்தில், ‘கடந்த மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற கூட்டணிக்கு தலைமையேற்று கடுமையாக உழைத்து பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் இப்பொதுக்குழு கூட்டம் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்மூலம், தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறுவதற்கு ஸ்டாலின் பங்களிப்பை தீர்மானத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நான் பேசும் போது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதை அடைவதற்கு இலக்கும் இருக்கிறது. அதைப் போல, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த கருத்தியல் தான் காமராஜர் ஆட்சி என்று குறிப்பிட்டேன்.
இன்று இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் காமராஜர் ஆட்சி என்கிற நமது கனவு மெய்ப்பட வேண்டுமென்றால் இன்றிலிருந்து அதற்கான உழைப்பை செலுத்தி நமது இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இங்கு உரையாற்றுபவர்கள் கருத்துகளை கூற வேண்டுமென்று கூறினேன்.
ஆனால், எனக்கு பின்னால் உரையாற்றியவர்கள் கூறிய சில கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு நாளேடுகளில் செய்திகளாக வெளிவந்துள்ளன.
பொதுக்குழுவின் நோக்கம் என்பது காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்துவது தான். அதேநேரத்தில், காங்கிரஸ் பங்கேற்றிருக்கிற கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற ஸ்டாலினின் கடுமையான உழைப்பையும், வெற்றிக்கான அவரது பங்களிப்பையும் எப்பொழுதுமே மதிக்க தவறியதில்லை.
அவரது பங்களிப்பில்லாமல் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. சட்டப்பேரவையில் எனது உரைகள் அனைத்துமே திமுக தலைமையிலான ஆட்சிக்கு உற்ற துணையாகவும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முறியடிக்கிற வகையிலும் அமைந்துள்ளதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்துவது இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்துவதாகும். இந்நிலையில், வெளிப்படைத்தன்மையோடு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கருத்துகளை சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
ராகுல் காந்திக்கும், ஸ்டாலினுக்கும் இடையே இருக்கிற கொள்கை சார்ந்த இணக்கத்தின் காரணமாகவே இந்தியா கூட்டணி தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
அந்த இணக்கம் என்பது உண்மையான உணர்வின் அடிப்படையிலானது. இந்தியாவிலேயே தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாமல் இருப்பதற்கு காரணம், இரு தலைவர்களிடையே இருக்கிற கொள்கை சார்ந்த இணக்கமான உறவு தான்.
அதனால் தான் தமிழகத்தில் மகத்தான வெற்றியை இந்தியா கூட்டணியால் பெற முடிந்தது. எனவே, திமுக, காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர, சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல.
கடந்த 2003 இல் தொடங்கிய இக்கூட்டணி ஒரு தேர்தலை தவிர, அனைத்து தேர்தல்களிலும் கூட்டணியாகவே தேர்தல் களத்தை சந்தித்திருக்கிறோம். எஃகு கோட்டை போல் இருக்கும் இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அம்மு அபிராமியின் காதலர் இவரா? – அதிர்ச்சியில் குக் வித் கோமாளி ரசிகர்கள்!
குவைத் தீ விபத்து: 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – 2 தமிழர்களின் நிலை என்ன?