தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜூலை 1) தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நடைபயணத்தை தொடங்க இருக்கிறது. மாவட்ட தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த நடைபயணத்தில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
நடைபயணத்தில் கலந்து கொள்ள டெல்லியில் இருந்து தலைவர்கள் வர இருக்கிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் தேதியை அறிவிப்போம். திருப்பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்க உத்தேசித்துள்ளோம்.
எங்கள் தலைவர் ராகுல் காந்தி கால்நடையாக இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். அண்ணாமலையை போல நாங்கள் நடைபயணம் செய்ய மாட்டோம். எங்களது மாவட்ட தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கால்நடையாக தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள போகிறோம்.
இது வெறுப்பு அரசியலுக்கான நடைபயணம் அல்ல, தமிழ்நாட்டின் கட்டமைப்பை வலிமைப்படுத்தவதற்காக, தமிழர்கள் மீது அன்பு செலுத்துவதற்கான நடைபயணம்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா முழுவதும் பாரத் ஜோடா நடைபயணம் மேற்கொண்டார். அவரது நடைபயணம் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உத்வேகம் அளித்தது.
அதேபோல, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 234 தொகுதிகளிலும் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துரை வைகோவின் புதிய பாணி, ‘குடும்ப அரசியல்’!
”சிருங்கேரி மட ரகசியங்களை வெளியிடுவோம்” : அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை பதிலடி!