தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பிப்ரவரி 21 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட செல்வப் பெருந்தகை, மறுநாள் பிப்ரவரி 22 ஆம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை முதன் முறையாக கூட்டினார்.
அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய செயலாளர் சிரி வெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. முன்னாள் மாநிலத் தலைவர்களில் தங்கபாலு கலந்துகொண்டார்.
கூட்டம் தொடங்கியதும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து காங்கிரசில் இணைந்த சசிகாந்த் செந்தில் பூத் கமிட்டி அமைப்பாளர்கள் பற்றியும் காங்கிரஸ் வார் ரூம் பற்றியும் சுமார் அரைமணி நேரம் வகுப்பெடுத்தார்.
பூத் கமிட்டிகளின் பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், “வாரத்துக்கு ஒரு முறை வீடியோ கான்பிரன்சில் ஆய்வு செய்வேன்” என்று கூறினார். மேலும், “திடீரென பூத் கமிட்டி பொறுப்பாளர்களோடு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் பேசுவார்கள்” என்று உற்சாகப்படுத்தினார்.
மாவட்டத் தலைவர்களில் ஆறேழு பேர் பேசினார்கள். அதில் திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் பேசியபோது, “வேட்பாளர் தேர்வில் மாவட்டத் தலைவர்களுக்கு மாநிலத் தலைமை முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும், நமது கட்சியின் போஸ்டர்களில் டிசிப்ளின் வேண்டும். காந்தி. காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் படங்களைப் போட வேண்டும்.
ஒவ்வொரு கோஷ்டியினரும் தங்களது இஷ்டத்துக்கு தங்களுக்கு வேண்டிய தலைவர்களை போட்டு போஸ்டர் அடித்துக் கொள்கிறார்கள். கட்சியில் முக்கியமானவர்களை விட்டுவிடுகிறார்கள். எனவே. திமுக., அதிமுக போல நாமும் போஸ்டர்களில் ஒரு டிசிப்ளின் கொண்டு வரவேண்டும். நமது முக்கிய தலைவர்களை நாம் போஸ்டர்களில் போடாமல் விட்டுவிடுவதால் தான் பாஜகவினர் நமது தலைவர்களை அபகரித்துக் கொள்கிறார்கள்” என்று பேசினார் மணிகண்டன்.
திருவாருர் மாவட்ட தலைவர் துரைவேலன், “திமுக பாணியில் மாவட்டச் செயலாளர்களாக மாற்றுங்கள். மாவட்ட தலைவர் என்று போடுவதை விட மாவட்டச் செயலாளர் என்று போடுங்கள். மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியை வளர்க்கும் பொறுப்பையும் அதிகப்படுத்தி, அதிகாரத்தையும் அதிகப்படுத்துங்கள்” என்று கோரினார்.,
மாவட்டத் தலைவர்கள் பேசிய பிறகு மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை,
“எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக நான் இருப்பேன், நாம் அனைவரும் இருக்க வேண்டும். செல்வப்பெருந்தகை தலைவராகிவிட்டார். இனி அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அவரது நண்பர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார் என்று யாரும் எண்ண வேண்டாம். நான் உழைப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பேன். வேறு எந்த அடிப்படையிலும் நான் முக்கியத்துவம் தரமாட்டேன்.
மாவட்டத் தலைவர்களை உடனடியாக மாற்றும் எண்ணம் இல்லை. தேர்தலுக்காக கடுமையாக உழையுங்கள். வருகிற மக்களவைத் தேர்தலில் மாவட்டத் தலைவர்களுக்கு அதிக வாய்ப்புகளை பெற்றுத் தருவேன். நமது கூட்டணிக் கட்சியான திமுகவிடம் நாம் அதிக தொகுதிகளைக் கேட்கவேண்டுமென்றால், நாம் வலிமையாக மாற வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் திமுகவின் தொங்குசதையென யாரும் நினைக்க வேண்டாம். நமது உரிமையைக் கேட்டுப் பெறுவோம். அதற்கு நாம் நம்மை வலுப்படுத்திக் கொள்வோம்.
இன்னொரு முக்கிய விஷயம், சத்தியமூர்த்தி பவனுக்குள் இனி எந்த பேனரும் வைக்கக் கூடாது. பேனர்களை எல்லாம் வெளியே வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் பேனர்களில் என் படத்தை பெரிதாக போடுங்கள் என்று சொல்ல மாட்டேன். என் படத்தை சிறியதாக போடுங்கள், நமது இளந்தலைவர் அடுத்த பிரதமர் ராகுல் காந்தியின் படத்தை பெரிதாக போடுங்கள். ராகுல் காந்தியை முன்னிறுத்தியே நாம் தேர்தலை சந்திக்கிறோம். ராகுல் காந்தியையே நாம் பிரதானப்படுத்த வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்வில் பேசிய மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார், “சிறப்பாக செயல்படும் மாவட்ட தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது யாரும் கை வைக்க முடியாது. மாவட்டத் தலைவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுங்கள்” என்றார்.
பிப்ரவரி 21 ஆம் தேதி மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நிலையில், ‘என்றேனும் ஒரு நாள் காமராஜர் ஆட்சியை தமிழ்நாட்டில் அமைப்போம்’ என்று சபதம் எடுத்த செல்வப்பெருந்தகை, முதல் முறை கூட்டிய மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில், “திமுகவின் தொங்குசதையல்ல காங்கிரஸ்” என்று கூறியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘நினைத்துக்கூட பார்க்கவில்லை’ செல்வராகவன் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி பதிவு!