காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் போன்றவர்களை தங்களது கட்சியின் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று விஜய் நேற்று(அக்டோபர் 27) கூறியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பதிலளித்துள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில், இன்று(அக்டோபர் 28) காலை பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான செல்வப் பெருந்தகையிடம் தவெக கட்சி மாநாடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “புதிதாகக் கட்சி ஆரம்பித்ததற்கு விஜய்க்கு வாழ்த்துகள். இந்த ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் புதிய கட்சிகளை ஆரம்பிக்கலாம், மக்களுக்காகக் குரல்கொடுக்கலாம், போராட்டங்களை முன்னெடுக்கலாம்.
அதே நேரத்தில் பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை உள்ளது. விமர்சனமும் செய்யலாம். அந்த வகையில் அவர் விமர்சனமும் செய்துள்ளார்.
அவர் யார் யாரையெல்லாம் விமர்சனம் செய்தாரோ, அவர்கள் அதற்குப் பதிலளிப்பார்கள். அதே நேரத்தில், பெருந்தலைவர் காமராஜரைப் பற்றிப் பேசியிருக்கிறார், தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை உள்வாங்கி இருப்பதாக சொல்லியிருக்கிறார்.
மூன்றாவதாக அம்பேத்கர் பற்றிப் பேசுகையில், ஏற்ற தாழ்வில்லாத சமூகத்தைப் படைக்க வேண்டும், தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று அவர் பேசியது வரவேற்கத்தக்கது.
அதே போல், முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அஞ்சலை அம்மாள், மற்றும் நான்கு காங்கிரஸ் தலைவர்களது பெயர்களைக் கையில் எடுத்திருக்கிறார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வேலு நாச்சியார் பற்றிப் பேசியிருக்கிறார். ஆனால் இது எந்த திசையில் தவெக பயணிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கட்சி ஆரம்பிக்கும் போது எல்லோரும் கொள்கைகள், கோட்பாடுகள் சொல்கிறார்கள் . ஆனால் அதற்குப் பின்பு எதோ வகையில் திசை மாறி சென்றுவிடுகிறார்கள்.
எப்படி அவர் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தாரோ, அதில் அவர் உறுதியாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி எந்த காலத்திலும் ஃபாசிஸ சக்திகளுடன் கைகோர்த்ததும் இல்லை, கைகோர்க்கப் போவதும் இல்லை” என்றார்.
முன்னதாக காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் போன்றவர்களை தங்களது கட்சியின் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று விஜய் சொன்னதற்கு “காமராஜரை சொந்தம் கொண்டாட எங்களுக்கே உரிமை உள்ளது என்று செல்வப்பெருந்தகை பதில் கூறியிருந்தார்.
இதற்கிடையில் “நம்மை நம்பி களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும். 2026-ஆம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் . மேலும் சமூக நீதியை அமல்படுத்தத் தேவையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்”என்று மாநாட்டில் விஜய் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று(அக்டோபர் 28) பதிவிட்டுள்ளார். அதில் “ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அதிமுக – தவெகவுடன் ரகசிய கூட்டணியா?: ஆர்.பி.உதயக்குமார் பதில்!