தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை இன்று (மார்ச் 1) சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் திருமாவளவனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை,
“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின்பு, என்னுடைய அண்ணன் திருமாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் விசிக வேட்பாளர்கள் எந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்களோ, அந்த தொகுதிகளில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் வெற்றி பெற உறுதி செய்வோம்.
திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் முடிந்துவிடும்” என்று தெரிவித்தார்.
அப்போது, ஜாபர் சாதிக் சகோதரர் விசிக கட்சியில் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த திருமாவளவன், “ஜாபர் சாதிக் சகோதரருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தொடர்பிருப்பதாக அண்ணாமலை கூறுகிறார். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் அவர் பெயர் இல்லை. இருப்பினும் அவர் மீது குற்றச்சாட்டு இருப்பதால் நடவடிக்கை எடுப்போம்.
மோடி இனி தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும், பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை. அவர்களின் கனவு பலிக்காது. அவர்கள் நினைப்பது போல் தமிழ்நாடு வட இந்திய மாநிலம் அல்ல. இந்த தேர்தலில் அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலக்ஷன் ஃப்ளாஷ்: கமல் போட்டியிடும் தொகுதி எது?
நெருங்கும் தேர்தல்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்!