கடந்த ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை ஒட்டி காவி உடையணிந்த திருவள்ளுவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், ஆளுநர் மாளிகையில் நாளை (மே 24) மாலை 5 மணிக்கு திருவள்ளுவர் தின விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவர் புகைப்படம் காவி நிறத்தில் இடம்பெற்றுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “அரசுடமையாக இருந்த சாதி, மத, சமய சார்பற்ற திருவள்ளுவரின் புகைப்படம், 1991இல், நாட்டுடமையாக்கப்பட்டது.
அதன் பிறகு, அந்தப் புகைப்படத்தை நாட்டில் உள்ள அனைவரும் அச்சிட்டு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து ஆளுநர் மாளிகை புகைப்படத்தை வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது.
சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படிச் செய்வது கண்டனத்திற்குரியது. வருத்தத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்!
புனே: கார் விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு பனிஷ்மென்ட் இதுதான்!