செஸ் ஒலிம்பியாட் : வீரர்களுக்குப் பதில் பிஜேபி-காங்கிரஸ் மோதல்!

அரசியல்

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (ஜூலை 28) சென்னையில் தொடங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு கவனித்துவரும் வேளையில், இதன் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என விமர்சனங்களும் எழுந்தன. என்றாலும் பிஜேபியினர் அந்த விளம்பரங்களில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் மோடி படத்தையும் இணைத்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடி வருவதையடுத்து, இந்தப் போட்டியை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, ’44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் புறக்கணிக்கிறோம். இந்த புறக்கணிப்பு பிரதமர் மோடிக்கு எதிரானதே தவிர, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானது அல்ல. மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு ஒன்றிய அரசு துணைபோவதால் இதனை புறக்கணிக்கிறோம்’ என அதில் குறிப்பிட்டிருந்தார்.

செல்வப்பெருந்தகையின் இந்த அறிக்கை தொடர்பாக, பிஜேபி கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, அவருடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில், “சரிதான். இது அறிவுபூர்வமான விளையாட்டு. ஆகவே, செஸ் போட்டியை புறக்கணிப்பது சரியான முடிவே” எனப் பதிவிட்டுள்ளார்.
நாராயணன் திருப்பதியின் டிவிட்டர் பதிவைக் கண்ட செல்வப்பெருந்தகை, அதற்கு தக்க பதிலடியும் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “எங்களுடைய அறிவு நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தி அவர்களை பின்பற்றும் அறிவு. உங்களுடைய அறிவு என்பது அதே மகாத்மா காந்தி அவர்களை சுட்டு படுகொலை செய்த நாதூராம் கோட்சேயை பின்பற்றும் அறிவு, இரண்டிற்கும் வித்தியாசம் இதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வீரர்கள் விளையாடுவதற்கு முன்னதாகவே நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகவே விளையாடுகிறார்கள். அதிலும், பிஜேபி, காங்கிரஸ் கட்சிகள் சிறப்பாகவே விளையாடுகின்றன.

ஜெ.பிரகாஷ்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.