ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி இன்று (ஜூன் 19) அவருக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் “அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து” என தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து
ராகுல் காந்தி பிறந்தநாளை ஒட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல் காந்திக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் மீதான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், கேட்காத மில்லியன் கணக்கான குரல்களின் மீது உங்களின் அழுத்தமான இரக்கமும், உங்களின் தனித்து நிற்கும் பண்புகளாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் இரக்கம் என்ற காங்கிரஸ் கட்சியின் நெறிமுறைகள், உங்கள் எல்லா செயல்களிலும் தெரியும், கடைசி நபரின் கண்ணீரைத் துடைக்கும் உங்கள் பணி தொடரும்.
நீங்கள் நீண்ட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்.” என வாழ்த்து கூறியுள்ளார்.
பிரியங்கா காந்தி வாழ்த்து
ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி அவரது சகோதரியும், காங்கிரஸ் பொது செயலாளருமான பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “என் இனிய சகோதரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க்கையை பற்றிய தனிப்பட்ட கண்ணோட்டம், பிரபஞ்சத்தின் பாதையை ஒளிர செய்கிறது.
எப்போதும் என் நண்பர், என் சக பயணி, விவாத வழிகாட்டி, தத்துவவாதி மற்றும் தலைவர். எப்போது ஜொலித்துக்கொண்டே இருங்கள்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை வாழ்த்து
ராகுல் காந்திக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “எங்கள் அன்பு தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்த நாளில் வகுப்புவாத மற்றும் மத பாசிசத்திற்கு எதிரான அவரது போராட்டம் மற்றும் நல்லிணக்கம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான அவரது அர்ப்பணிப்புப் பணிக்காக நாங்கள் என்றும் அவருடன் நிற்கிறோம்” என பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
கனிமொழி வாழ்த்து
“ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கான இந்த கடினமான காலங்களில் அவரது அர்ப்பணிப்பு, தொலைநோக்கு மற்றும் தைரியம் பாராட்டுக்குரியது.
நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதில் வெற்றியுடன், நமது நாட்டின் பெருமையைப் புத்துயிர் அளிப்பதில் அவர் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்.” என ராகுல் காந்தியை, திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்தியுள்ளார்.
சரத்பவார் வாழ்த்து
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், “ராகுல் காந்திக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் ஆரோக்கியமான, நீண்ட மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்” என ராகுல் காந்திக்கு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
“மாற்றான் தோட்டத்து மல்லிகை போல”
இந்நிலையில், இன்று (ஜூன் 19) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “இன்று ராகுல் காந்தியின் பிறந்தநாள். “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனமுண்டு”.
காங்கிரஸ் கட்சியை கட்டிக்காக்கும் ராகுல் காந்தியின் விடாமுயற்சி பாராட்டத்தக்கது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என பேசினார்.
முன்னதாக, கடந்த மே 21ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ராகுல் காந்தி குறித்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில், “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என ராகுல் காந்தியை பாராட்டி ஒரு வீடியோ ஒன்றையும் செல்லூர் ராஜூ பதிவிட்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களில் இந்த பதிவை அவர் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்த்து
“என் அன்பு ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் இடைவிடாத போராட்டமும் மதச்சார்பற்ற இந்தியாவுக்கான இந்த பொருத்தமான பயணமும் தொடரட்டும்.” என நடிகரும், அரசியல் விமர்சகருமான பிரகாஷ் ராஜ் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நீட் தேர்வு முறைகேடு… ஜூன் 21ல் காங்கிரஸ்… ஜூன் 24ல் திமுக போராட்டம்!
சிவகார்த்திகேயன் படத்தால் போட்டி போட்டு வியாபாரம் ஆன பிரபாஸின் ’கல்கி’!