இதுதான் ஆண்ட பரம்பரையா மூர்த்தி? பிடிஆரின் கெத்தை பாருங்க… திமுகவில் சிண்டு முடியும் செல்லூர் ராஜூ

Published On:

| By Aara

மதுரை திமுகவில் அமைச்சர் மூர்த்திக்கும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் பொங்கலை ஒட்டி நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வைத்து, அமைச்சர் மூர்த்திக்கும், அமைச்சர் பிடிஆருக்கும் இடையே சிண்டு முடிந்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

மதுரை ஜீவாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார். கலைஞர் கருணாநிதி கூட தனது மகன் ஸ்டாலினை பார்த்து பார்த்து கவனமாக அரசியலுக்கு கொண்டு வந்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அப்படி இல்லை நேரடியாக இன்பநிதியைக் கூட களத்தில் இறக்கிவிட்டார். இன்பநிதி யுகே.,வில் படிக்கிறார்னு சொன்னாங்க. இப்ப அவரும் வந்துட்டாரு.

ஜல்லிக்கட்டு போட்டியில் இன்பநிதி அமருவதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் இடம் கொடுத்து எழுந்திருக்கிறார்கள். திமுக ஆட்சியில் ஆண் மாவட்ட ஆட்சியர்களே சிரமப்படுகிறார்கள். இவர் பெண் ஆட்சியர்… என்ன செய்வார் பாவம்?” என்ற செல்லூர் ராஜூ, அந்த மேடையில் நடந்த சம்பவத்தைக் கூறினார்.

“அமைச்சர் மூர்த்தி அருகில் இன்பநிதியும் அவரது நண்பர்களும் அமர்ந்திருக்கிறார்கள். தன்னை ஆண்ட பரம்பரை என்று குறிப்பிட்டுக் கொள்ளும் அமைச்சர் மூர்த்தி, அருகில் அமர்ந்த இன்பநிதிக்கு ஸ்நாக்ஸ் வழங்குகிறார். அப்படி வழங்கும்போது அதன் துகள்கள் இன்பநிதி மீது விழுந்துவிட்டது. ஆண்ட பரம்பரையாக குறிப்பிடும் அமைச்சர் மூர்த்தி வேகமாக அதை துடைக்கிறார். எனக்கு அமைச்சரவையில் இடம் கொடுங்கள் இன்பநிதி, என இப்போதே துண்டு போட்டு வைக்கிறார் மூர்த்தி.

ஆனால்… அவருக்கு அருகிலேயே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கெத்தாக அமர்ந்திருந்தார், அதுதான் கெத்து, கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தான் என்பதற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் உதாரணம்” என்று பேசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

செல்லூர் ராஜூவின் இந்தப் பேச்சு மதுரை திமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel