பாஸ்கர் செல்வராஜ்
உற்பத்தி இயக்கத்துக்கான எரிபொருள்-தாவர-ஊன் உணவுச் சுழற்சி
மனிதர்களின் உருவாக்கத்துக்கு புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துகளும் இயக்கத்துக்கு எரிபொருள் ஆற்றலும் வேண்டும். அதேபோல பொருள்களின் உருவாக்கத்துக்குக் கனிமங்களும் இயக்கத்துக்கு எரிபொருளும் வேண்டும். இதில் இயக்கத்துக்கான ஆற்றல் தொடர்ந்து எரிந்து தீர்வது. தேவை அதிகமானது. தொடர்ந்து உருவாக்கி பயன்படுத்த வேண்டியது. ஆகவே, அது மலிவானதாகவும் எளிதில் கிடைப்பதாகவும் இருக்க வேண்டும். ஆனால், எதார்த்தம் அதற்கு நேரெதிராக இருக்கிறது.
நாம் மனித இயக்கத்துக்கான ஆற்றல் நிறைந்த உணவுப்பொருள்களை உற்பத்தி செய்வதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால், மனித உருவாக்கத்துக்கு அடிப்படையான புரதம், உயிர்ச்சத்து, கொழுப்பு உற்பத்தியில் தன்னிறைவு இன்றி சமையல் எண்ணெய், பருப்பு வகைகளைப் பெருமளவில் இறக்குமதி செய்யும் நிலையில்தான் இருக்கிறோம்.
அதேபோல பொருள் உற்பத்திக்கான இரும்பு, சிமென்ட் உற்பத்தியில் தன்னிறைவை எட்டியிருக்கிறோம். ஆனால், பொருள்களின் இயக்கத்துக்கான எரிபொருளுக்கோ, பெரும்பகுதி இறக்குமதியையே சார்ந்து இருக்கிறோம். கனிம தேவையைக் குறைக்க முடியும். ஆனால், நம்மிடம் இல்லாத மற்ற கனிமங்களுக்குப் பிறரைச் சார்ந்திருப்பது தவிர்க்க இயலாதது.
நம்முடைய மிகப்பெரிய பலம், உலகிலேயே அதிகமான பயிரிடத்தக்க நிலங்களையும் மலிவான தொழிலாளர்களையும் பெற்றிருப்பது. பலகீனம், போதுமான நீர் ஆதாரமின்றி பருவ மழையை நம்பியிருப்பதும் தொழிலாளர்கள் போதுமான திறன் வளர்ச்சியின்றி இருப்பதும்.
உற்பத்திக்குத் தேவையான இவ்வளவு நிலம் நமக்கு இயற்கை தந்த கொடை. அதன் அருமை தெரியாமல் நாய் பெற்ற தெங்கம் பழமாய் உருட்டி திரிகிறோம். அதற்கான அடிப்படை காரணம், போதிய நீராதாரங்கள் இல்லாமல் இருப்பதும், அரசிடம் அதற்கான எந்த திட்டமும் இல்லாமல் இருப்பதும், விவசாயத்தை இப்படி நலிந்துபோகச் செய்திருக்கிறது.
இந்தப் பருவமழை சார்ந்த விவசாயம் உணவு உற்பத்தியில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. விவசாயிகளை எப்போதும் நிலையான வருமானம் அற்றவர்களாகவும் விவசாயக் கூலிகளை பருவ காலங்கள் தவிர்த்து மற்ற மாதங்களில் வேலையற்றவர்களாகவும் வைத்திருக்கிறது.
இந்த நிலையற்ற உணவு உற்பத்தியைப் பயன்படுத்தி வணிகர்கள் சந்தையில் உணவுப் பொருள்களைப் பதுக்கி விளையாடும் சித்து விளையாட்டில் விலைகள் கூடி மக்கள் பணத்தை இழந்து, வாங்க வழியின்றி அவற்றை நுகரும் அளவைக் குறைக்கிறார்கள்.
நிலையான உணவு உற்பத்திக்கு பருவமழை சார்ந்த இயற்கையின் எல்லையைச் செயற்கையான தொழில்நுட்பங்களின் வழியாகப் பகுதியளவேனும் உடைக்க வேண்டும். மக்களின் ஊட்டச்சத்து குறைபாடு ஒழிய கொழுப்பு, புரதம், உயிர்ச்சத்துகளைப் பெற இறைச்சி, எண்ணெய் வித்துகள், பயறு வகைகளின் உற்பத்தி பெருக வேண்டும்.
இறைச்சிக்கான ஆடு, மாடு, கோழி வளர்ப்பு மற்றும் ஆற்றலுக்கான அரிசி உற்பத்திக்கு அதிக நீர் வேண்டும். எள், கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துகள், உளுந்து, துவரை உள்ளிட்ட பயறு வகைகள், சோளம், கம்பு உள்ளிட்ட தானிய வகைகளுக்குக் குறைவான நீர் போதுமானது.
இறைச்சி உற்பத்தியில் இருக்கும் இடர், இந்த விலங்குகள் வெளியேற்றும் பசுமைக்குடில் வாயுவான மீத்தேன். அதோடு பராமரிப்பு முதல் பதப்படுத்துதல் வரை அதிக உழைப்பாளர்களைக் கோருவதால் தானியங்களைப் போல இறைச்சி உற்பத்தியை முழுமையாக இயந்திரமயமாக்க முடியாது. அதனால்தான் இன்றும் குறிப்பாக ஆடு, மாடு இறைச்சி விலைமதிப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
நம்மிடம் இருக்கும் மலிவான தொழிலாளர்களைக் கொண்டு சூரிய மின்னாற்றல் பசுமைக்குடில்களை நிறுவி, அந்த மரபுசாரா ஆற்றலைப் பயன்படுத்தி, விலங்குகளை வளர்த்து, இறைச்சியைப் பதப்படுத்தி, அவற்றின் கழிவுகளில் இருந்து மீத்தேனைப் பிரித்தெடுத்து, எஞ்சிய எருவை தாவர, தீவன உற்பத்திக்கான உரமாக்கி, ஓர் இயற்கை சுழற்சியை ஏற்படுத்தி, ஒரு புதிய பசுமைப் புரட்சியை நாம் நிகழ்த்தலாம். அது இந்த உற்பத்தியில் நிலவும் புவிவெப்பமயமாதல் மற்றும் நமது மக்களின் ஊட்டச்சத்து பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.
நீர் வளமுள்ள நன்செய் பகுதிகளில் இந்தப் பசுமைக்குடில் இறைச்சி உற்பத்தியையும் வறண்ட புன்செய் பகுதிகளில் பரந்து விரிந்த சூரிய மின்னாற்றல் உற்பத்தி வயல்களையும் நிறுவி, அதன் நிழலைப் பயன்படுத்தி ஈரப்பதத்தைக் காத்தும், அதனைத் தூய்மைப்படுத்த பயன்படுத்தும் நீரைச் சொட்டுநீர் பாசனமாக மாற்றியும், எண்ணெய் வித்து, பயறுகள், தானிய உற்பத்தி செய்யலாம். இந்தத் தாவர கழிவுகளும் எரிபொருள் இயற்கை உர உற்பத்திக்குப் பயன்படும்.
இதற்கு நீர்வளமிக்க பகுதிகளில் இருந்து நீரை வறண்ட பகுதிகளுக்குக் கொண்டுவந்து தேக்கி வழங்கும் அடிப்படை கட்டமைப்பு வேண்டும். கூடவே, தற்போது நடைமுறையில் இருக்கும் ஆயிரம் ஆண்டு பழமையான கால்வாய், வாய்க்கால் வரப்பு பாசன முறைகளை விட்டுவிட்டு நவீன குழாய், சொட்டுநீர் பாசனத்துக்கு மாற வேண்டும்.
அதுமட்டுமல்ல; விவசாயிகளிடம் ஓரிரு ஏக்கர் துண்டுகளாகச் சிதறிக்கிடக்கும் நிலத்தை ஒருங்கிணைந்த கூட்டுறவு சூரிய மின்னாற்றல் பண்ணைகளாக மாற்ற வேண்டும். இவற்றை எல்லாம் செய்து முடிக்க தடையாக இதனுடன் இணைந்த மூலதனப் பொருள் செலவு மிகப் பெரும் தடையாக நிச்சயம் நிற்கும்.
இதற்கான தீர்வு தற்போது அதிக பரப்பில் அதிக தொழிலாளர்களைக் கொண்டு நடக்கும் விவசாயத்தை அதிக செலவு கொண்ட மூலதனப் பொருள்களைக் கொண்டு குறைவான பரப்பில் அதிக உற்பத்தியைக் கூட்டுவது மட்டுமே.
இப்படி முதலில் உற்பத்தி திறனைக் கூட்டுவதும் பின்பு, மூலதனப் பொருள்களின் உற்பத்தியைத் தன்வயமாக்கி விலையை மலிவாக்கி உற்பத்தி செய்யும் நிலத்தின் அளவைக் கூட்டுவதுமான அசைவியக்கம் எரிபொருளிலும், உணவு உற்பத்தியிலும் நம்மை தற்சார்பை எட்டச் செய்யும்.
இப்படியான தொடர் வளர்ச்சி சமமான செல்வப்பகிர்வுக்கு வித்திட்டு, தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலி, விடுப்பு, ஓய்வு உள்ளிட்ட உரிமைகளுடன் கூடிய “முறையான வேலைவாய்ப்பை” வழங்கி வாங்கும் திறனைக் கூட்டி மக்களுக்கு உணவு, கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதிகளுடன் கூடிய “தரமான வாழ்வை” வழங்கும்.
இந்தக் கடினமான உள்கட்டமைப்பை ஏற்படுத்தி சாதியாகப் பிரிந்துகிடக்கும் விவசாயிகளை ஒருங்கிணைத்து சமமான கூட்டுறவு உற்பத்தியைச் சமூகநீதி அரசியல் சாதிக்கும்போது அது தமிழகத்தை எண்பது விழுக்காட்டுக்கும் மேலாக நகரமயமாக்கி சாதிய சமத்துவத்தை மலர செய்து ஓர் உண்மையான சமூக மாற்றத்தை நிகழ்த்தும்.
உற்பத்தி, மூலதனம், மனிதவளம், வணிகத்தை இணைத்தியக்கும் இணையச் சுழற்சி
நிலப்பிரபுத்துவ காலத்தில் நிலமும் மனித உழைப்பும் (Land, Manpower) உற்பத்தி காரணிகளாக இருந்தன. முதலாளித்துவ காலத்தில் மூலதனமும் தொழில்நுட்பமும் (Capital and knowledge) அவற்றுடன் இணைந்தன. நுட்பங்கள் பெருகி பரவி முதலாளித்துவம் உச்சம்பெற்ற இந்த ஏகாதிபத்திய காலத்தில் வளர்ந்த நாடுகளில் இவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் நிர்வாகமும் (Management) வளராத நாடுகளில் உற்பத்தி நுட்பங்களின் செய்கையறிதலுடன் கூடிய நிர்வாகமும் (know how and management) உற்பத்தி காரணிகளாயின.
ஏகாதிபத்தியத்தில் இருந்து சோசலிசத்துக்கு மாறிச்செல்லும் இந்தக் காலத்திய தகவல் தொழில்நுட்பப் புரட்சி நிலம், நீர், வானம் என இயற்கையின் எல்லைகளையும், செயற்கையாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நாடுகளின் எல்லைகளையும், மனிதர்களுள் நிலவும் இனம், மொழி வரம்புகளையும் கடந்து அனைத்து செயல்பாடுகளையும் கணினி மொழியில் சேமித்து தரவுகளாக்குகிறது.
இந்தத் தரவுகளைக் கண்காணித்து பகுத்தாய்வதன் மூலம் அனைத்து உற்பத்தி காரணிகளையும் ஓர் இலக்கினை நோக்கி நேர்மறையில் ஒருங்கிணைத்து நெறிப்படுத்தவும் எதிர்மறையில் தன்னல நோக்கில் செலுத்தி, கட்டுப்படுத்த உதவுவதால் தரவுகள் உற்பத்தி காரணியாகவும் நிர்வாக காரணியின் தொழில்நுட்ப வடிவமாகவும் நிலைபெற்று வருகிறது.
எரிபொருள் உணவு தற்சார்பு உற்பத்தி இயக்கத்தில் இந்நுட்பம் நிலம், கடல், காற்றையும் பருவநிலை மாற்றங்களையும் கண்காணித்து, கணித்து உற்பத்தியைப் பெருக்கி இழப்பைக் குறைக்கவும், உற்பத்தியின் அளவைக் கணக்கிட்டு தேவைப்படும் இடங்களுக்குப் பரப்பவும், நிலையாகவும் இயங்கிக்கொண்டும் இருக்கும் மனிதர்களையும் பொருள்களையும் இணைக்கவும் அவசியமானது.
இதற்கு வானில் மெதுவாக இயங்கும் செயற்கைக்கோள் வரைபட இணைய இயக்கமும் நிலத்தில் இந்தச் சமிக்கைகளை வேகமாகப் பெற்று பகுத்தாய்ந்து நிகழ்நேரத்தில் செயல்பட 5ஜி இணையமும் நமக்கு இன்றியமையாதது. இதில் தற்போது தனியாரின் ஏகபோகம் நிலவுகிறது. இதனைத் தொடர அனுமதிப்பது ஆபத்தானது. அரசு இதில் ஈடுபட்டு இந்த ஏகபோகத்தை உடைப்பது அவசியமானது.
அரசின் அதாவது, சமூகத்தின் தலைமையில் திட்டமிட்ட பொருளாதார முன்னேற்றத்தின் பின்னடைவாக சுட்டிக்காட்டப்படுவது பிழையான மூலதன ஒதுக்கீடு, ஊழல், அரசின் அதீத சந்தை குறுக்கீடுகள்.
இணையதள பணப் பரிமாற்றம், மின்னணு நாணயவழி தரவுகளின் வழியாக இவற்றை நிர்வகிக்கும்போது இந்தக் குறைகளை நீக்கி திட்டமிட்ட வகையில் மூலதனத்தை ஒதுக்கி சமூக மாற்றத்தைச் சாதிப்பதை நம்மால் உறுதி செய்ய முடியும். வங்கிகளைக் கைப்பற்றி மூலதனத்தையும், பண உருவாக்கத்தையும் கையில் எடுத்திருக்கும் தனியாரை வெளியேற்றி மூலதனத்தை சமூகமயமாக்கும் திசையில் நகர்த்த முடியும்.
பணப் பரிமாற்றம் அடிப்படையில் பொருள்களின் பரிமாற்றம். பணத்தின் சுழற்சி பொருள்களின் சுழற்சி. இணையதள வணிக நுட்பத்தின் வளர்ச்சியும் அதன்மூலம் திரட்டப்படும் தரவுகளும் மூலதனம், உற்பத்தி, உழைப்பு ஆகிய முக்கிய காரணிகளைத் தனது காலடியில் கொண்டுவந்து கொண்டிருக்கிறது.
இந்தியச் சந்தையில் ஏகபோகம் செலுத்தும் இந்நிறுவனங்கள் ஆலைப் பொருள் வணிகத்தில் மட்டுமல்லாது… மக்களுக்கு அத்தியாவசியமான உணவு, கல்வி, மருத்துவத்திலும் இதன் கரங்கள் நீள்வது அவற்றின் விலைகளை உயர்த்தி மக்களின் வாழ்க்கை தரத்தைச் சரிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அரசு அத்தியாவசிய தேவைக்கான இந்தச் சேவைகளில் ஈடுபடுவது அதன் தலையாய கடமை. அரசை இதில் ஈடுபட சொல்வது தனியாரை முற்றிலுமாக வெளியேற்றுவது என்னும் பொருளில் அல்ல. அந்த ஏகபோகத்தை உடைத்து தரமான சேவை உரிய விலையில் எல்லோருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யக் கோருவது.
ஒன்றியம் தொடங்கியிருக்கும் இணைய வணிகதளம் (ondc) வெறும் அடையாள முயற்சி. இணையப் பண மாற்ற அமைப்புடன் அதனிடம் இருக்கும் ரயில் போக்குவரத்து, தபால் நிலைய மையங்களை இதில் இணைத்தால் பகுதியளவு வெற்றி பெறலாம். தமிழகத்திடம் முழுமையான போக்குவரத்து, கிராமம்தோறும் நியாய (உரிய)விலை கடைகள், சுகாதார நிலையங்கள், கல்விக் கூடங்கள் இருக்கும் நிலையில் அத்தியாவசிய சேவைகளை மையப்படுத்திய நமது முயற்சி நூறு விழுக்காடு வெற்றிபெறும்.
நமது உழைப்பின் சராசரி திறன் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால் தொழிலாளர்களின் கூலியின் அளவு குறைவாக இருக்கிறது. உற்பத்தி தொழில்நுட்பங்களை அடைய வேண்டுமானால் உழைப்பின் சராசரி திறன் (Averagelabor) கூட வேண்டும். பணமுள்ள ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்து வரும் தரமான கல்வி சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கச் செய்வதே சமூகத்தில் பல திறனுள்ள மனிதர்களை உருவாக்க இருக்கும் ஒரே வழி.
விவசாயத்தைப் போலவே நமது கல்வியும் செலவு அதிகமான, திறன் குறைவான மனிதர்களின் பங்களிப்பு சார்ந்ததாக இருக்கிறது. இதனைப் பகுதியளவுவேனும் இயந்திரமயமாக்க வேண்டும். இணையவழி கற்றல், செய்முறைகளைக் கற்பித்தல், கற்றல் திறனைக் கண்காணித்தல், கற்றலை உறுதி செய்தல், கற்றல் அளவைப் பரிசோதித்து மதிப்பிடுதல் ஆகியவற்றை இயந்திரமயமாக்குவதன் மூலம் மனிதர்களின் தேவையைக் குறைத்து கற்றலின் தரத்தையும், அளவையும் கூட்ட முடியும்.
கல்வி, மருத்துவ சேவைகளை திராவிட அரசியல் முதன்மைப்படுத்தியதன் காரணமாக வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மக்களின் சராசரி வாழ்நாள் எழுபத்து மூன்று ஆண்டுகளாக உயர்ந்திருக்கிறது. ஆனால், இந்த மொத்த உயிர்வாழும் நாளில் (Biological lifespan) நோயற்ற வாழ்நாளின் அளவு (Healthy lifespan) குறைவாகவே இருக்கிறது.
நமது சமூகத்தில் நோயின்றி மூப்படைபவர்களின் (Healthy aging) அளவு மிகக் குறைவாக இருக்கிறது. அப்படி என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் நிலை. இதனை மாற்ற ஊட்டச்சத்து உற்பத்தியைப் பெருக்குவதோடு உடற்பயிற்சி உள்ளிட்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் அவசர தேவை. இவை எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல்படுத்தி நடைமுறை மாற்றம் காண இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று சொல்ல முடியாது.
இதற்குள் நோயுற்ற முதியோரின் பெருக்கம் நமது சமூகத்தின் செலவையும் மருத்துவர்களின் தேவையையும் நிச்சயம் கூட்டும். இதனை எதிர்கொள்ள கல்வியைப் போன்று இந்தத் துறையிலும் பகுதியளவு இயந்திரமயமாக்க இணையச் சேவைகளை அரசு இப்போதே தொடங்குவது வரவிருக்கும் தீவிர இடரை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.
நமது இன்றைய ஊட்டச்சத்து, முறையான வேலைவாய்ப்பின்மைக்கும் நீண்டகால சாதிய சமூக பிரச்சினைக்கும் முன்வைக்கும் இந்தத் தொழில்நுட்ப பொருளாதார தற்சார்பை முன்னிறுத்திய அதன் வழியான அரசியல் தன்னாட்சியை அடையும் நான்கு சுழற்சிகள் மட்டுமே ஒரே தீர்வாகவோ… அது முற்றிலும் சரியானதாகவோ இருக்க முடியாது.
அப்படி நினைப்பது தன்னகங்காரம் தலைக்கு ஏறிவிட்டதன் வெளிப்பாடு. எவரேனும் போதாமையைத் தவற்றைச் சுட்டிக்காட்டி மாற்றை முன்வைத்தால் விரிவாக உரையாடி சரியை நோக்கி நமது சமூகம் நகர உதவும்.
கட்டுரையாளர் குறிப்பு
பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொருள் உற்பத்தியில் தற்சார்பு… நான்கு சுழற்சிகளை முன்வைத்த வாதங்கள்! : பகுதி 4
இந்தியாவின் தற்சார்பு சமூக மாற்ற விடுதலை – என்ன செய்ய வேண்டும்?- பகுதி 2
உக்ரைன் – பாலஸ்தீனப் போர்கள்..நொறுங்கும் அமெரிக்க ஆதிக்கம்..இந்தியா என்ன செய்ய வேண்டும்? – பகுதி 1
உக்ரைன் போரின் முடிவு, இந்தியாவின் நிலைப்பாடு – பகுதி 1
இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரின் பூகோள அரசியல் பொருளாதாரம்! – பகுதி 2
இந்தியாவின் மீதான உக்ரைனிய – பாலஸ்தீனப் போர்களின் தாக்கம்! – பகுதி 3