அடக்கி வாசிக்க ஸ்டாலின் உத்தரவு! திருப்பரங்குன்றத்துக்கு செல்லும் அமைச்சர் சேகர்பாபு

Published On:

| By Aara

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி வெட்ட தடை விதிக்கக் கோரியும், மலையை மீட்போம் என்றும் பாஜக, இந்து முன்னணி ஆகியவை போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. Sekarbabu visit Thiruparankundram

இந்நிலையில்  இந்த விவகாரம் குறித்து இன்று (பிப்ரவரி 5) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை ஒட்டேரியில் செய்தியாளர்களிடம் பேசினார்.  

“பாஜகவினர் ஏதோ ஒரு எண்ணத்தை மையமாக வைத்து இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை உண்டாக்க நினைக்கிறார்கள். நேற்று அவர்கள் நடத்திய போராட்டம் தேவையில்லாத போராட்டம்.

பல ஊடகங்கள், நான் பார்த்த வகையில் அந்த பகுதியுடைய மக்களின் பேட்டியை இஸ்லாமிய மற்றும் இந்து மக்களின் பேட்டியை எடுத்து ஒளிபரப்பினார்கள். அந்த ஊடகங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  ‘நாங்கள் அண்ணன் -தம்பிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.  இந்த பகுதியை சாராத வெளியூரிலிருந்து வருபவர்களால்தான் இந்த பிரச்சனை’ என்று அந்த மக்களே சொல்லி இருக்கிறார்கள்.

Thiruparangunram hill issue

திருப்பரங்குன்றம் திருக்கோவிலில் நேற்று ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டி மதவாதம், இனவாதம் என்ற ஒரு பிரச்சினையை பிரிவினையை ஏற்படுத்த நினைத்தார்கள்.  வடமாநிலங்களில் என்றால் இதற்கான சாத்திய கூறுகள் அமையக்கூடும். எச். ராஜா, அண்ணாமலை போன்றவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால்…  எங்கள் முதல்வர் எங்களை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லியிருக்கிறார்.

நீங்கள் வட மாநிலங்களைப் போல இங்கேயும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இங்கே இருக்கிற முதல்வர் உறுதிமிக்க முதல்வர். இரும்பு மனிதர். எங்கே கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கின்றார். ஆகவே இந்த பெரியார் மண்ணில், திராவிட மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஒரு காலமும் அனுமதிக்க மாட்டார்.

திருப்பரங்குன்றம் மலையை பொறுத்த அளவில் 1920 ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கியது. அதன் பிறகு 1930 ஆம் ஆண்டு லண்டன் பிரிவி கவுன்சில் ஒரு உத்தரவை வழங்கியது. அதைத் தொடர்ந்து 1958, 1975, 2004, 2017, 2021 என்று பல கட்டங்களில் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்றது. தற்போது கூட இது தொடர்பான இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

கடந்த காலங்களில் எந்தெந்த அடிப்படையில் நீதிமன்றங்கள் உத்தரவு வழங்கியதோ அந்த உத்தரவுக்கு ஏற்றார் போல் தான்,  இந்த அரசு நீதி தேவதை அரசு என்பதால் அதை மதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. Sekarbabu visit Thiruparankundram

ஆனால் இதை வைத்து அரசியல் குளிர்காயலாம் என்று பிரச்சினையை கையில் எடுக்கும் சிலருக்கு நான் சொல்லிக் கொள்வது… நீதிமன்றம் என்ன வழிகாட்டுகின்றதோ அதன்படி தான் இந்த அரசு செயல்படும். கூடிய விரைவில் அறநிலையத்துறை அமைச்சர் என்ற அளவில் முதல்வரின் அனுமதியோடு அந்த மலைக்கு செல்ல இருக்கின்றேன்”  என்றார் அமைச்சர் சேகர்பாபு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share