4 கோடி ரூபாய் விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றி பாஜகவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தல் பிரச்சார காலகட்டத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நெல்லையிலிருந்து சென்னை சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 4 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பிடிபட்டது.
அந்த பணத்தை எடுத்துச் சென்றவர்கள் நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் என்பதால், இந்த பணம் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்டதா என்ற சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பின்னர் அது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தொழில் பிரிவு தலைவர் கோவர்தனிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், அதைத் தொடர்ந்து பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர், பாஜகவின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
நெல்லை தொகுதியில் தான் வெற்றி பெற்றால் இந்த விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று கணக்கு போட்டு தேர்தல் முடிவுக்காக காத்திருந்தார் நயினார்.
ஆனால் தமிழகம் முழுவதும் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில் இப்போது சிபிசிஐடி விசாரணையும் தொடர்ந்து நடைபெறுகின்ற சூழலில் இந்த வழக்கை சமாளிக்க நயினார் நாகேந்திரன் வெவ்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து நெல்லை பாஜக வட்டாரத்தில் பேசியபோது, “அந்த பணம் பிடிபட்டபோது அது தன்னுடைய பணம் அல்ல என்று செய்தியாளர்களிடம் மறுத்திருந்தார் நயினார் நாகேந்திரன். மேலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய போது பிடிபட்ட அந்த பணம் பாரதிய ஜனதா கட்சியின் பணம் அல்ல என்று கட்சியின் மாநில பொருளாளர் எஸ். ஆர். சேகர் தெரிவித்திருக்கிறார்.
அது நயினார் நாகேந்திரன் பணமும் அல்ல, பாஜக கட்சியின் பணமும் அல்ல என்றால் அது யார் பணம் என்ற கேள்விக்கு தற்போது சிபிசிஐடி விடை காண முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில்… இந்த விவகாரத்தில் கட்சி உங்களை கைவிட்டுவிட்டது. எனவே இதை சொல்வதற்கு தகுதியான, அந்த அளவுக்கு கணக்கு காட்டக்கூடிய வருமானம் ஈட்டுபவர்தான் இதைச் செய்ய முடியும். அதுவும் அவர் நயினாரின் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும். போலீஸிடம் போய் முதலில் க்ளைம் செய்துவிட்டு, பின்னர் விசாரணை நடத்தும்போது உளறிக் கொட்டிவிடக் கூடாது. ஏன் இவ்வளவு நாட்கள் கழித்து க்ளைம் செய்ய வருகிறீர்கள் என்பதில் தொடங்கி இதில் பல கேள்விகளை போலீஸ் தொடுக்கும்.
அதையெல்லாம் சமாளிக்கக் கூடிய, நம்பிக்கைக்குரிய, வருமான வரி கட்டும் அளவுக்கான ஒருவரை நயினார் நாகேந்திரன் தரப்பு தீவிரமாக தேடி வருகிறது” என்கிறார்கள் நயினாருக்கு நெருக்கமான நெல்லை பாஜக வட்டாரங்களில்.
–வேந்தன்