பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக இன்று (செப்டம்பர் 25) அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்திய ஒன்றிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பது எனது நிலைப்பாடு. ஜெயக்குமார் முதன்முறையாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த போதே அதை வரவேற்றேன். இப்போதும் வரவேற்கிறேன்.
தமிழ் குறித்து பெருமை பேசும் பாஜகவும், காங்கிரஸும் தமிழை ஒருபோதும் ஆட்சிமொழியாக அறிவிக்கமாட்டார்கள். நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக இருக்க அனுமதிமாட்டார்கள். பின்னர் தமிழ்நாட்டில் எதற்கு இந்த பாஜகவும், காங்கிரஸ் வருகிறார்கள்? ஓட்டு வாங்குவதற்காக மட்டும் தான்.
பாஜகவுடன் கூட்டணி வைத்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. அது அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி தான்.
இந்த நிலையில் துணிந்து அதிமுக தற்போது எடுத்த முடிவை வரவேற்கிறேன். ஒருவேளை மறுபடியும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் மக்கள் அவர்களை வெறுத்துவிடுவார்கள். அதனால் இந்த முடிவே நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரும் என்று நான் நம்புகிறேன்.
ஆனால் ஒருபோதும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவிற்கோ, ஒன்றிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிக்கோ நாம் தமிழர் கட்சி கூட்டணி சேராது” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக பாஜக கூட்டணி முறிவு: சந்தேகம் கிளப்பும் அழகிரி
இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் செயல்படாது!