நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் இடையிலான விவகாரம் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அடுத்தடுத்த கட்டங்களை எட்டியிருக்கிறது.
கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி சீமான் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் ஒன்றைக் கொடுத்தார் விஜயலட்சுமி. அதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதெல்லாம் ஓரிரு வார்த்தைகளில் கடந்து சென்ற சீமான்… செப்டம்பர் 1 ஆம் தேதி விஜயல்ட்சுமி திருவள்ளூர் மாவட்ட மகளிர் கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தவுடன் சற்று சுதாரித்தார்.
நேற்றே (செப்டம்பர் 1) வழக்கறிஞர்களுடன் ஆலோசித்தார். இன்று (செப்டம்பர் 2) ஊட்டியில் நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிக்காக வந்த சீமான் செய்தியாளர்களிடம் இதுகுறித்து விரிவாக பேசினார்.
சீமான் வீடியோவும் விஜயலட்சுமி பதிலும்!
“நான் உயர்ந்த லட்சியத்தை தூக்கிக் கொண்டு வருகிறேன். நீங்கள் இரண்டு லட்சுமியை தூக்கிக் கொண்டு வந்து சண்டை போடுகிறீர்கள். அரசியல் களத்தில் என்னை வீழ்த்துவதற்குக் கையில் எடுத்துள்ள கருவி மிகவும் கேவலமானது.
13 ஆண்டுகளாக இதே பிரச்சனையை தேர்தல் வரும்போது மட்டும் பேசிக் கொண்டிருந்தால் அரசியல் பின்னணி இல்லாமல் இவர்கள் பேசுவார்களா? நான் அமைதியாக இருப்பதால் அந்த பெண் சொல்வது எல்லாம் உண்மை என்று எடுத்துக் கொள்ள கூடாது.
விஜயலட்சுமியாவது என் கூட ஒரு படத்தில் நடித்தார். அவரோடு வீரலட்சுமி வருகிறாரே ஏன்? அவருக்கு என் மீது எரிச்சல், காழ்ப்பு இருக்கிறது. ஒரு தமிழன் வளர்வதில் ஏறிப் போவதில் தமிழர் அல்லாதவர்களுக்கு எரிச்சல் இருக்கிறது.
அதனால்தான் நான் என் பணியை தொடர்ந்து செய்கிறேன். அந்த விஜயலட்சுமி இதுபோல மேலும் பலர் மீது புகார் அளித்திருக்கிற ஆவணங்கள் என்னிடம் உள்ளன” என்ற சீமான்… கர்நாடகாவில் நடிகரும் பாஜக எம்.பி.யுமான ஜெகதீஷ் என்பவர் மீது விஜயலட்சுமி இதேபோல கொடுத்த புகாரின் வீடியோவை ஓடவிட்டார். அந்த வீடியோவில் விஜயலட்சுமி கன்னட மொழியில் ஜெகதீஷ் மீது புகார் சொல்கிறார்.
“இதேபோல அவர் இன்னும் பலர் மீது புகார் கூறியதற்கான ஆவணங்கள், கடிதங்கள் இருக்கின்றன” என்று கூறினார் சீமான்.
இதற்கு நடிகை விஜயலட்சுமியும் இன்று சூடாக பதிலளித்திருக்கிறார். எச்சில் துப்புவதுபோல் ஒரு வீடியோ வெளியிட்டு, இதுதான் என் பதில் என தெரிவித்துள்ளார். இதேநேரம் இன்று (செப்டம்பர் 2) தமிழ்நாடு முழுதும் மாவட்டத் தலைநகரங்களில் விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் எஸ்.பி.க்களிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பணம் பறிக்கும் நோக்கத்தோடு விஜயலட்சுமி செயல்படுவதாக அந்த புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து வருட பஞ்சாயத்து!
சீமான் -விஜயலட்சுமி விவகாரத்தில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது?
சீமான் தன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டதாக 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் நடிகை விஜயலட்சுமி.
அதன் அடிப்படையில் சீமான் மீது பாலியல் தொல்லை கொடுத்தல், மிரட்டல், மோசடி செய்தல் ஆகிய குற்றங்களை குறிக்கும் 417, 420, 354, 376, 506 (2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு (1007/2011) பதியப்பட்டது. இது தொடர்பாக சீமான் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில்… மீண்டும் விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல்நிலையத்தை அணுகி, ‘சீமான் என்னை திருமணம் செய்துகொள்ள உறுதியளித்துள்ளார். அதனால் இந்த புகார் மீது மேல் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று மனு அளித்தார்.
அதன் பேரில் அந்த புகார் அப்படியே விடப்பட்டது. மதுரை செல்வம் என்பவர் மூலம் சீமான் செய்த சமாதான முயற்சிகளின் அடிப்படையிலே அன்று அப்படி செய்ததாக விஜயட்சுமி தெரிவித்துள்ளார். மேலும், “என்னைத் திருமணம் செய்துகொள்வதாக சொல்லிவிட்டு கயல் விழியை திருமணம் செய்துகொண்டுவிட்டார் சீமான். மாலை மாற்றி திருமணம் செய்துகொண்ட என்னை ஏமாற்றிவிட்டார். இந்த நிலையில் தற்போது மீண்டும் என்னை நாம் தமிழர் கட்சியினர் மிரட்டுகிறார்கள்” என ஆகஸ்டு 28 ஆம் தேதி சென்னை மாநகர கமிஷ்னர் அலுவலகத்தில் விஜயலட்சுமி புகார் அளித்தார்.
அவரோடு தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பின் தலைவி வீரலட்சுமியும் வந்திருந்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது கண்ணீர் விட்டு அழுத விஜயலட்சுமி, “சீமானை கைது செய்யாமல் விட மாட்டேன்” என்று ஆவேசமாகக் கூறினார்.
12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஏன் இந்த புகார் என்று பத்திரிகையாளர்கள் சிலர் அவரிடம் கேட்க வாக்குவாதமாகி, வாடா போடா என்று பத்திரிகையாளர்கள் மீது ஆத்திரப்பட்டார் விஜயலட்சுமி.
போலீஸ் என்ன செய்கிறது?
இதற்கிடையே விஜயலட்சுமியிடம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் ஆகஸ்டு 31 ஆம் தேதி 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். அப்போது போலீஸாரிடமும் அழுதுகொண்டே பேசிய விஜயலட்சுமி, ‘எப்படியாவது சீமானை கைது செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து விஜயலட்சுமியை திருவள்ளூர் மாவட்ட மகளிர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி பவித்ரா முன்பு செப்டம்பர் 1 ஆம் தேதி பகலில் ஆஜர்படுத்தினார்கள். விஜயலட்சுமியிடம் 2011 இல் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஏற்கனவே வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 161 வாக்குமூலம் பெறப்பட்டது.
அதனால் அவரிடம் மீண்டும் வாக்குமூலம் பெற வேண்டிய தேவை போலீசாருக்கு எழவில்லை. ஆனால், சீமான் மீது புதிய புகாரை விஜயலட்சுமி கூறியிருப்பதால்… இதில் சட்ட சிக்கல் ஏற்படக் கூடாது, போலீஸ் செயல்பாட்டுக்கு அரசியல் நோக்கம் வந்துவிடக் கூடாது என்ற காரணத்தால் சட்டப்படி நீதிபதி முன்னிலையில் விஜயலட்சுமியை ஆஜர்படுத்தினார்கள். ஏற்கனவே விஜயலட்சுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை சரிபார்க்கும் வகையில் மறு வாக்குமூலம் அவரிடம் இருந்து பெறப்பட்டது.
விஜயலட்சுமியின் வாக்குமூலம்!
”நான் வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த பிறகு சீமான் என்னிடம் அவரது நண்பரும் மறைந்த வழக்கறிஞருமான தடா சந்திரசேகர் மூலம் சமாதானம் பேசினார். என்னை மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் வைத்து பகிரங்கமாக வாழத் தயார். ஆனால் கொஞ்சம் பொறுத்திரு என்று சொன்னார். நானும் அதை ஏற்றுக் கொண்டேன். ஆனால் சீமான் தரப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. பணமும் அனுப்பி வந்தவர், அதையும் நிறுத்திவிட்டார்.
நான் இப்போது எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கிறேன். சீமானை நம்பி என்னை இழந்து நான் ஏழு முறை கருக் கலைத்துள்ளேன். உடல் நலமும் இதனால் கெட்டுவிட்டது. இப்போதாவது எனக்கு நீதி வேண்டும் என்று கேட்டால், அவரது கட்சியினர் போன் பண்ணி மிரட்டுகிறார்கள்” என்று நீதிபதியிடம் தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி என்று போலீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
விஜயலட்சுமியிடம் ஒரு மணி நேரம் மறு வாக்குமூலம் பெற்ற நீதிபதி பவித்ரா, அதன் பின் அரைமணி நேரம் ஆவணங்களில் கையெழுத்து வாங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளார்.
விஜயலட்சுமி பின்னால் வீரலட்சுமி… வீரலட்சுமியின் பின்னால் யார்?
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இனியன் ஜான் இந்த விவகாரம் குறித்து மின்னம்பலத்திடம் பேசினார்.
இனியன் ஜான்
“அண்ணன் சீமான் மீது 12 வருடம் கழித்து ஏன் மீண்டு புகார் கொடுக்க வேண்டும்? ஏனென்றால் தேர்தல் நெருங்குகிறது அல்லவா… போன தேர்தலின் போதும் இப்படித்தான் பேட்டி கொடுத்தார். இந்த 12 ஆண்டுகளில் ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என மூன்று முதல்வர்கள் போலீஸ் துறையை தங்கள் கையில் வைத்திருந்தனர்.
2021 முதல் முதல்வர் மு.க.ஸ்டாலினும் போலீஸ் துறையை கையில் வைத்துள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதே சீமான் மீது புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. இதுபோன்ற பெண் விவகாரமாக இருந்தால் தனது அமைச்சராகவே இருந்தாலும் சும்மா விட மாட்டார் ஜெயலலிதா.
ஆனால் சீமான் மீதான புகாரில் உண்மை இல்லை என்பதால்தான் ஜெயலலிதாவும் அதை ஒரு பொருட்டாக கருதவில்லை. சங்கராச்சாரியாரையே கைது செய்த ஜெயலலிதா… இந்த புகாரில் உண்மை இருந்திருந்தால் சீமானை விட்டிருப்பாரா? தமிழ் தேசிய சிந்தனையாளர்களை கொச்சைப்படுத்தும் முயற்சிதான் விஜயட்சுமியின் செயல்பாடு.
பணம் பறிக்கும் நோக்கத்தோடு அவதூறு பரப்பும் நோக்கத்தோடும் புகார் கூறியிருக்கிறார் விஜயலட்சுமி.
அதுமட்டுமல்ல விஜயலட்சுமியோடு போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்ற வீரலட்சுமி 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பாக பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் மதிமுக வேட்பாளராக ’பம்பரம்’ சின்னத்தில் நின்றார்.
வீரலட்சுமியை வைகோவே விஜயகாந்த் வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்து மக்கள் நலக் கூட்டணியில் சேர்த்தார். அதோடு இல்லாமல் தன் கட்சியின் பம்பரம் சின்னத்தில் மதிமுக வேட்பாளராக வீரலட்சுமியை களமிறக்கினார். அப்படிப்பட்ட வீரலட்சுமிதான் இப்போது விஜயலட்சுமியோடு கை கோர்த்திருக்கிறார். அப்படியென்றால் சீமானுக்கு எதிரான சதி எங்கிருந்து தொடங்குகிறது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்” என்றார் இனியன் ஜான்.
இதேநேரம் திடீர் ட்விஸ்ட் ஆக இன்று (செப்டம்பர் 2) வீரலட்சுமிக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஒரு வீடியோ பரவி வருகிறது.
சட்ட ரீதியாக அடுத்து என்ன?
போலீஸார் விஜயலட்சுமியை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய நடவடிக்கை மூலம் சீமான் மீதான பழைய எஃப்.ஐ.ஆருக்கு புதிய உயிர் கிடைத்துள்ளது.
அடுத்து சீமானையும் அழைத்து விசாரிக்க வேண்டியதுதான் சட்ட நடைமுறையின் அடுத்த கட்டம். எனவே இந்த புகார் தொடர்பாக சீமானுக்கு சம்மன் அனுப்பலாமா என்பது பற்றி வளசரவாக்கம் போலீஸார் தங்கள் மேலதிகாரிகளிடம் அறிவுரை கேட்டிருக்கிறார்கள்.
’நீதிமன்ற அறிவுறுத்தல்களின்படியே போலீஸாரின் நடவடிக்கை இருக்கட்டும்’ என்று போலீஸாருக்கு வாய்மொழி உத்தரவு வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே சீமான் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். அனேகமாக சீமானை விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என்கிறார்கள் போலீஸார்.
–வேந்தன், வணங்காமுடி
1500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கீடு!
கல்விச் சான்றிதழ்களில் ஆதார் எண் இருக்கக் கூடாது.. யுஜிசி அறிவிப்பு!