நவம்பர் 1ஐ தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும், தமிழ் நாட்டிற்கென ஒரு கொடி வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும் இன்று (நவம்பர் 1) அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மெட்ராஸ் மாகாணம் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அன்று தான் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மெட்ராஸ் எனப் பிரிக்கப்பட்டது. பின்னர் 1967ஆம் வருடம் ஜூலை 18ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ‘மெட்ராஸ்’ என்ற பெயர் ‘தமிழ்நாடு’ என்று மாற்றப்பட்டது.
கடந்த 2019ஆம் வருடம் அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசு நவம்பர் 1 ‘தமிழ்நாடு’ நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது.
ஆனால் 2021 வருடம், தமிழ்நாடு திமுக அரசு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்ட நாளான ஜூலை 18 ‘தமிழ்நாடு’ நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று காலை தனது எக்ஸ் தளத்தில் ” “தமிழ்நாடு” என்ற பெயரும், “தமிழகம்” என்ற பெயரும் பரிபாடல், புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால இலக்கியங்களிலும் நிறையப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழர் இனம்; தமிழர்களின் தாயகம் தமிழ்நாடு என்ற பெயர்த் தொடர்ச்சி தமிழர்களுக்கே உரியது. சங்கரலிங்கனார் “தமிழ்நாடு” எனப் பெயர் வைக்க வேண்டும் என்பதோடு பன்னிரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநோன்பிருந்து 76ஆம் நாளில் உயிர் துறந்தார்.
இவையன்றிப் பல போராட்டங்கள் நடந்தன. அதன் அடிப்படையில், அன்றைய முதலமைச்சர் அண்ணா 1967 சூலை 18 அன்று சட்டப்பேரவையில் “தமிழ்நாடு” பெயர் மாற்றுமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்துக் கட்சியினரும் ஆதரித்து அத்தீர்மானத்தை நிறைவேற்றினர்.
“தமிழ்நாடு நாள்” என்பதை ம.பொ.சி. மற்றும் தமிழ் உணர்வாளர்கள் நவம்பர் 1 என்று கடைபிடித்தார்கள். 1990களில் வெகுமக்கள் இயக்கமாக – கருத்தாக நவம்பர் 1ஐ தமிழ்நாடு நாள் என்று பரவச் செய்தது, ஐயா அருணாச்சலம் அவர்கள்.
இதற்கிடையில், சூலை 18ஆம் நாளையே தமிழ்நாடு நாள் என ஏற்க இருப்பதாகத் திமுக அரசு அறிவித்தது. ஆனால், அரசின் முடிவில், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு உடன்பாடில்லை.
சங்ககாலத்து தமிழர்களின் தாயகம்…
ஏனென்றால், நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் என்றால், சங்க காலத்திலிருந்து தமிழர்கள் வாழ்ந்துவந்த தாயகம் நினைவுக்கு வரும். சங்க இலக்கியங்கள் நினைவுக்கு வரும். சேர, சோழ, பாண்டிய பேரரசர்கள் நினைவுக்கு வருவார்கள்.
தமிழ்நாட்டு எல்லைகளை மீட்கப் போராடிய போராளிகள் நினைவுக்கு வருவார்கள்; தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டம், கேரளத்தின் தேவிக்குளம் பீர்மேடு, கர்நாடகத்தின் கோலார் தங்கவயல் போன்ற பல பகுதிகளை, தெலுங்கர்கள் – மலையாளிகள் – கன்னடர்கள் பறித்துக் கொண்டது நினைவுக்கு வரும்.
இதன் மூலம், தமிழின உணர்ச்சி ஊறும். இவற்றையெல்லாம் மறைத்து மடைமாற்றத்தான் சூலை 18 என்பதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது.
இது தமிழர்களிடையே நடத்தும் உளவியல் போராகவே தமிழக வாழ்வுரிமைக் கட்சி எண்ணுகிறது. எனவே, இனம், மொழி அடிப்படையில் தமிழர்களின் தாயகம், இந்திய ஒன்றிய அரசால் சட்டப்படி வடிவமைக்கப்பட்ட நாள் 1956 நவம்பர் – 1ஆம் நாளே தமிழ்நாடு நாளாக கருத வேண்டும்.
எழுச்சியாக கொண்டாட வேண்டும்
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நாள் விழாவைத் தமிழ்நாடு அரசு மிக எழுச்சியாக-மக்கள் விழாவாக கொண்டாடும் வகையில் உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கலந்து பேசி, தமிழ் நாட்டிற்கென ஒரு கொடியை அறிவிக்க வேண்டும்.
அப்படி அறிவிக்கப்படும் கொடியைத் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் அனைத்திலும் ஏற்றிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.” என்று வேல்முருகன் பதிவிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேற்று (அக்டோபர்31) தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்நாடு என்கின்ற நம் உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும். 01-11-2024 இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அறிக்கை விடுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
டாப் 10 செய்திகள் : தமிழ்நாடு அரசு விடுமுறை முதல் வீகன் நாள் வரை
கிச்சன் கீர்த்தனா: மோத்தி லட்டு!
ஹெல்த் டிப்ஸ்: மூன்று லிட்டர் தண்ணீர் எல்லோருக்கும் அவசியமா?