நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூன் 1) புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கு நேற்று முடக்கப்பட்டது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவரது கண்டனத்தை ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கம் தொடர்பாக பெருநகர காவல்துறை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதில், “நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல் துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
எனவே, இவ்விவகாரத்தில் சென்னை பெருநகர காவல் துறையை தொடர்புப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதைத் தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தது சென்னை பெருநகர காவல்துறை.
இந்நிலையில் இன்று மதியம் சீமான் ”செந்தமிழன் சீமான் @NTKSeeman4TN” என்ற பெயரில் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
இந்த ட்விட்டர் பக்கத்தின் முதல் பதிவிலேயே ட்விட்டர் கணக்கு முடக்கத்திற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சீமான்.
அந்த பதிவில், “புதிய நாடாளுமன்றத்தை செங்கோல் நாட்டி திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல் வளையை நெரிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் கொடுங்கோன்மை செயல் வெட்கக்கேடானதாகும்.
கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையான கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
சீமானின் புதிய ட்விட்டர் கணக்கில் வெளியான பதிவு நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.
மோனிஷா
இலங்கை அணியில் அறிமுகமாகும் சிஎஸ்கே வீரர்!
மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு!