கோமியம் அமிர்தமா? : தமிழிசைக்கு சீமான், செல்வப்பெருந்தகை கண்டனம்!

Published On:

| By christopher

கோமியம் மருந்து என்றால், அதனை மருத்துவமனைக்கு லிட்டர் லிட்டராக அனுப்பி குடிக்கச் சொல்வீர்களா? என்று தமிழிசை சவுந்தரராஜனுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாட்டுப் பொங்கல் தினத்தன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ”கோமூத்திரம் குடித்ததால் என் தந்தைக்கு 15 நிமிடத்தில் காய்ச்சல் குணமாகிவிட்டது. அதில் கிருமி நாசினிகள், ஜீரண மண்டலத்துக்கு தேவையான பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்துள்ளது” என்று கூறினார்.

அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது அறிவியலுக்குப் புறம்பானது என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்வினையாற்றினர். அதேவேளையில் பாஜக தலைவர்கள் காமகோடி கருத்தை ஆதரித்து பேசி வருகின்றனர்.

ஒரு ஐஐடி இயக்குனர் சும்மா சொல்லிவிடுவாரா?

அந்த வகையில், சென்னையில் இன்று (ஜனவரி 21) செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், “ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சிப் பூர்வமாக மாட்டின் சிறுநீரான கோமியம், அமிர்த நீர் என்று எழுதப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் கோமியம் மருந்து என சொல்கின்றனர். சங்க இலக்கியங்களில் மாட்டுச் சாணத்தால்தான் வீடுகளின் முற்றத்தில் பூசி இருந்தனர். சாணத்தின் நடுவே பூவரசம் பூவை வைத்து வழிபாடு செய்கிறவர்கள்.

கோமியத்தில் கிருமி நாசினி மாட்டுச் சாணத்தில் கிருமி நாசினி இருந்ததால்தான் முன்னோர்கள் இப்படிச் செய்தனர். அப்ப மாட்டுச் சாணத்தில் கிருமி நாசினி இருக்கிற போது மாட்டு சிறுநீரான கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. இது ஆராய்ச்சிப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறிய கருத்தை ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முடியாது.

இது ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தில் மருந்துதான் கோமியம். ஆயுர்வேதத்தில் 80 வகையான நோய்களுக்கு கோமியத்தை பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி குறிப்பிட்ட காய்ச்சல் கூட அந்த 80 வகையான நோய்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை தலைமை தாங்கக் கூடியவர் சும்மா சொல்லிவிடுவாரா?

என் மருந்து என் உரிமை!

என் உணவு என் உரிமை என நீங்கள் பேசுகிறீர்களே.. என் மருந்து என் உரிமை என நாங்கள் சொல்கிறோம்.. விஞ்ஞானப்பூர்வமாக மருந்து என நாங்கள் சொல்லும்போது ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்? இந்திய பண்பாட்டு முறையில் நாங்கள் எதனை குறிப்பிட்டாலும் அதனை ஏற்க முடியாது என்கிறார்கள். கோமியம் பதப்படுத்தப்படுகிறது. பஞ்ச கவ்யம் அமேசானில் கூட விற்பனையாகிறது.

நான் அலோபதி மருத்துவர்தான். ஆனால் ஒருங்கிணைந்த மருத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் ஆயுர்வேதத்தில் கோமியம் மருந்தாக இருக்கிறது என நான் கூறுகிறேன்” என தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

இதனையடுத்து அவரது கருத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

அப்ப மருத்துவமனைக்கு அனுப்புங்க!

விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “கோமியம் மருந்து என்றால், அதனை மருத்துவமனைக்கு லிட்டர் லிட்டராக அனுப்பி குடிக்கச் சொல்வீர்களா? இந்த பைத்தியங்களிடம் நாடும் நாட்டு மக்களும் சிக்கிவிட்டது. மாட்டுப்பால் குடிப்பவன் இடைச்சாதி, மாட்டுக்கறி தின்பவன் கீழ்ச்சாதி, மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்சாதி. இப்படி தான் இந்த நாடு கட்டமைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே இந்தியாவில் தான் நெய் எரிக்கப்படுகிறது, பால் கொட்டப்படுகிறது, மூத்திரம் குடிக்கப்படுகிறது. இதில் இருந்து தப்பிக்க அரசியல் புரட்சி மட்டுமே ஒரே வழி” என்று சீமான் பேசியுள்ளார்.

மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதா?

அதே போன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகையும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை.

ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா? மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம்.

இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா? வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்” என செல்வப்பெருந்தகை காட்டமாக விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel