‘இது என் கட்சி, வெளியே போடா’… நெல்லை நாதக கூட்டத்தில் நடந்த களேபரம்!

அரசியல்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (நவம்பர் 14) சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது, நாம் தமிழர் நிர்வாகிகளை சீமான் ஒருமையில் பேசியதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நெல்லை மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பர்வீன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எட்டு வருஷமா கட்சியில இருக்கேன். இந்த கட்சிக்காக நான் எவ்வளவு உழைச்சிருக்கேன்னு எல்லோருக்குமே தெரியும். இன்னைக்கு நடந்த கூட்டத்துல சீமான் அண்ணன் பேசுனாங்க. அவர் பேசி முடிச்ச பிறகு கேள்வி கேக்குறதுக்காக எழுந்தேன்.

உடனே, யாருடா நீ… உனக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்… வெளிய போடா, நீ சாதி ரீதியா கூட்டத்தை அமைச்சிக்கிட்டு இருக்கேன்னு கோபமா திட்டுனாங்க.

நான் கொண்டையாங்கோட்ட மறவர்டான்னு சாட்டை துரைமுருகன் நேத்து மேடையில பேசுறாரு. அதை நீங்க அனுமதிக்கிறீங்களான்னு சீமான் அண்ணன்கிட்ட கேட்டேன். அவன் அப்படி தாண்டா பேசுவான், நீ இருக்கணும்னா இரு, இது என்னோட கட்சி, வெளிய போடான்னு மறுபடியும் சொன்னாரு. அதனால நானும் இன்னும் சில பேரும் கூட்டத்துல இருந்து வெளியே வந்துவிட்டோம்” என்றார்.

நிர்வாகிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ள சீமான், “சர்வாதிகாரம் இல்லாமல் எந்த செயலும் நேர்மையாக இருக்காது. ஒரு நேர்மையாளன் சர்வாதிகாரியாக தான் இருக்க முடியும். காமராஜர், நேரு போன்ற ஆட்சியாளர்கள் அன்பான சர்வாதிகாரியாக தான் இருந்திருக்கிறார்கள். கட்சி என்றால் சில விதிகள் இருக்கிறது. அதற்கு கட்டுப்படவில்லை என்றால் வெளியேற தான் வேண்டும்” என்றார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் சோகம்… எலி மருந்தின் நெடியால் 2 குழந்தைகள் மரணம்!

தூத்துக்குடியில் ஆய்வு… கனிமொழி பங்கேற்காதது ஏன்? – உதயநிதி விளக்கம்!

+1
0
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *