“கர்நாடகா தேர்தலுக்காக கேரளா ஸ்டோரி”: சீமான்
கர்நாடக தேர்தலை முன்னிட்டு பாஜக அரசு கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று சென்னை அமைந்தகரை ஸ்கைவாக் திரையரங்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “இந்தியா மதச்சார்பற்ற நாடு. அண்மைக்காலமாக நம் நாட்டில் மதமே ஆட்சி செய்கிற ஒரு கொடுங்கோன்மையை நாம் பார்க்கிறோம். ஹிட்லரை போல பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். இஸ்லாம், கிறிஸ்துவ சமூகத்தினருக்கு எதிரான உணர்வை பாஜக அரசு வளர்த்து வருகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் ஃபைல்ஸ், புர்கா போன்ற திரைப்படங்கள் வருகிறது. கர்நாடக தேர்தலையொட்டி கேரளா ஸ்டோரி திரைப்படம் வந்துள்ளது. 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திப்பு என்ற திரைப்படம் வர உள்ளது. நாட்டின் விடுதலைக்காக ஆர்.எஸ்.எஸ் ஏதாவது போராட்டத்தை முன்னெடுத்தார்களா. மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த கோழை சாவர்க்கரை வீர சாவர்க்கராக சித்தரிக்கிறார்கள். கேரளா ஸ்டோரி திரைப்படத்தைத் திரையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்றால் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“காவலர் பள்ளியை மூட நினைப்பதா?”: எடப்பாடி கண்டனம்!