விஜய்யின் வாரிசுக்காக களமிறங்கிய சீமான்

அரசியல்

”பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்” என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 12ஆம் தேதி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அந்தப் படங்களுக்கு அளித்தது போக, மீதமிருக்கும் திரையரங்குகளை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு கொடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தந்து.

இதனால், வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. இப்படம், ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படம் நேரடித் தமிழ்ப் படம் என இயக்குநர் வம்சி தெரிவித்திருந்த நிலையில், தெலுங்கில் டப் செய்து இந்தப்படம் வெளியாகும் சூழல் உள்ளதால் வாரிசு படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

seeman says about vijays varisu movie issue

மேலும் வாரிசு படம் வெளியாகும் அதே தினத்தில் ‘வீர சிம்ம ரெட்டி’ மற்றும் ‘வால்டர் வீரய்யா’ போன்ற நேரடி தெலுங்கு படங்கள் வெளியாகப்போவதால், வாரிசு படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (நவம்பர் 18) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ’விழாக்காலங்களில் நேரடித் தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

எண்ணற்ற தெலுங்குத் திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்விதத் தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிற நிலையில், தமிழ்த் திரைப்படங்கள் வெளியாவதற்குக் கெடுபிடி விதித்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத் தவறான முன்னுதாரணமாகும்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களைச் சேர்ந்த திரைத் துறையினருக்கும் புகலிடமாகவும், மூலமாகவும் விளங்கிய தமிழ்த் திரையுலகை வஞ்சிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தெலுங்குத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அன்புத் தம்பி விஜய் அவர்களது வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கான திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

நேரடித் தெலுங்குத் திரைப்படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்கு திரைப்படங்களோ எதுவாகினும் தமிழகத்தில் எவ்விதப் பாரபட்சப் போக்குக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாது.

seeman says about vijays varisu movie issue

தமிழ்த் திரைப்படங்களுக்கு இணையாக திரையரங்குகளை பெற்று வரும் நிலையில், ஆந்திர மாநிலத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும்.

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, காந்தாரா, கே.ஜி.எஃப். எனப் பிறமொழி படங்களுக்கு தமிழகத்தில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்போது, அப்படங்களுக்கு இருந்த மக்கள் ஆதரவுதான் அளவுகோலாக வைக்கப்பட்டதே ஒழிய, மொழிப் பாகுபாடு ஒருபோதும் காட்டப்பட்டதில்லை.

கலைக்கு மொழி இல்லை என்று கூறி, தமிழ்த் திரையுலகிலும், திரையரங்க ஒதுக்கீட்டிலும் மற்ற மொழியினருக்கும் அவர்களது திரைப்படங்களுக்கும் பெருவாய்ப்பு வழங்கி, தென்னிந்திய நடிகர் சங்கம் எனப் பெயரைத் தாங்கி நிற்கும் தமிழ்த் திரையுலகுக்கு இந்நிகழ்வு ஒரு பாடமாகும்.

தென்னிந்திய நடிகர்களுள் முதன்மையானவராகத் திகழும் தம்பி விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கே இந்நிலை என்றால், மற்ற படங்களின் நிலை என்னவாகும் எனும் கேள்விதான் எழுகிறது.

இச்சிக்கல், விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல; தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிராகவே ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடியாகும். இதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது.

ஆகவே, தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிரான தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் தெலுங்குத் திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

”சன்னி லியோன் ஆடம்பரம் காட்டாதவர்”: புகழ்ந்த இயக்குநர்!

ஸ்ரீதேவியின் சென்னை வீடு: சுற்றிக் காட்டிய ஜான்வி கபூர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *