நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கு தன்னிச்சையாக விளக்க கடிதம் கொடுத்ததாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநில தலைவர் சேவியர் பெலிக்ஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறாக பாடல் பாடியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்த திருச்சி சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து சாட்டை துரைமுருகன் கைதுக்கு திருச்சி எஸ்.பி வருண்குமார் தான் காரணம் என்றும் நாடார், கோனார், தேவேந்திரர் என எந்த சமுதாயத்தினரையும் வருண் குமாருக்கு பிடிக்காது என்றும் சீமான் குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து வருண்குமார் தனது வழக்கறிஞர் மூலமாக சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பினார்.
அதில், தனக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக ஏழு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரூ.2 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், சமூக வலைதளங்களில் எஸ்.பி வருண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக திருச்சி மாநகர தில்லை நகர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சீமான் உள்ளிட்ட அக்கட்சியை சேர்ந்த 22 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், வருண்குமார் அனுப்பிய நோட்டீஸுக்கு நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநில தலைவர் சேவியர் பெலிக்ஸ் சீமானின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக 16 பக்க விளக்க கடிதம் கொடுத்ததாக தெரிகிறது.
அந்த கடிதத்தில், “திருச்சி எஸ்.பி வருண்குமாரின் சாதி என்ன என்பது எனக்கு தெரியாது. காவல் அதிகாரி ஒருவர் சாட்டை துரைமுருகனிடம் வருண் குமாரின் சாதி குறித்து கூறியதாக என்னிடம் சொன்னதை நான் பேசிவிட்டேன்.
இளம் அதிகாரியான வருண் குமாருக்கு டிஜிபி ஆகும் அளவிற்கு தகுதி இருக்கிறது. அவர் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு கருத்திற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது நான் மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் கொண்டவன்” என்று தெரிவித்துள்ளார். இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து சேவியர் பெலிக்ஸை நீக்கி சீமான் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சேவியர் பெலிக்ஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் படி அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாளை முதல் தவெக கொடி பறக்கும்… விஜய் அறிவிப்பு!
ஜாபர் சேட் மீதான ED வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!