டிஜிட்டல் திண்ணை: ஒரு கோடி வாக்குகள்- சீமான் டார்கெட்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.  லொக்கேஷன் சென்னை காட்டியது.

“நாம் தமிழர்  கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் சரிபாதி பெண் வேட்பாளர்களை அதாவது 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்திய சீமான்…

அதேபோல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் சரிபாதி 20 தொகுதிகளில் பெண்களை நிறுத்த இருக்கிறார். இதற்காக ஏற்கனவே தொகுதி பொறுப்பாளர்களை நியமித்துள்ள சீமான்…  வேட்பாளர்களையும் கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டார்.

இந்த நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி காலை சென்னை கே.கே.நகரில் ஒரு தனியார் விடுதியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், பாசறைகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்  ஆகியோருடன் ஒரு ரகசிய கூட்டத்தைக் கூட்டினார் சீமான்.

பொதுவாகவே சீமான் கூட்டம் என்றால் அவரது சொந்த யு ட்யூப் சேனல், கட்சியின் யு டியூப் சேனல் ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பி விடுவார்கள். ஆனால்  இந்தக் கூட்டத்தில்  கலந்துகொண்டவர்களின் செல்போன்களை கூட வெளியிலேயே வாங்கி வைத்துக் கொண்டு அதற்கு பதிலாக ஒரு டோக்கனைக் கொடுத்துள்ளனர்.

அதாவது  சீமான் பேச்சை யாரும் செல்போனில் கூட பதிவு செய்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. செல்போன்களோ, வீடியோ கேமராக்களோ இல்லாத நூறுக்கும் மேற்பட்டவர்கள் கூடிய இந்த கூட்டத்தில் காலை 10.40 முதல் மதியம் 1.15 மணி வரை சீமான்  மட்டுமே பேசினார்.  அவர் பேசிய பேச்சு இதோ…

’கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றோம்.

மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகளை விட நாம் அதிக வாக்குகள் வாங்கினோம். கட்சிக் கட்டமைப்பே இல்லாத இடத்தில் கூட நாம் தமிழர்  கட்சிக்கு வாக்குகள் விழுந்திருக்கின்றன.

நாம் தமிழ்நாட்டில் 7 சதவிகித வாக்குகள்  பெற்றிருக்கிறோம். காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கவிப்பேரசு வைரமுத்துவிடம், ‘என் சொந்த ஊரிலேயே நாம் தமிழர் கட்சிக்காரங்க அதிக ஓட்டுகளை வாங்கியிருக்காங்க’ என்று ஆச்சரியப்பட்டு பேசியிருக்கிறார்.

இப்படி நாம் ஒவ்வொரு தேர்தலாக வளர்ந்துவருகிறோம். நம்மைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கம் என்னவென்றால் நாம் தமிழர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடி வாக்குகளை பெற வேண்டும். அதற்கு நாம் எல்லாரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

அதற்கு நாம் கட்சியை வலுப்படுத்த வேண்டும்., கட்சியே இல்லாத இடங்களிலும் நாம் வாக்குகளைப் பெற்றிருக்கிறோம் என்பதால் கட்சியை  கட்டமைக்காமல் இருந்துவிட முடியாது. உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். நமது பத்திரிகைக்கு சந்தா சேகரிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் கட்சியை நடத்த முடியாமல் நான் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன். ஒரு நல்லது கெட்டதுக்கு போனா கூட நம் கட்சியினருக்கு நிதியுதவி செய்ய முடியாத நிலையில இருக்கேன். இதுதான் உண்மை. அதற்காகத்தான், ‘துளி’ என ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தறேன்.

கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் எல்லாரும் மாதாமாதம் கட்சிக்கு ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். நான் மாதாமாதம் கட்சிக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்து வருகிறேன். நீங்கள் நிர்வாகிகள் கொடுக்கும் நிதியை வைத்துதான் நாம் கட்சி நடத்த  முடியும்.

seeman ready for mp election naam tamilar crore votes

அதேபோல  என்னை ஒரு ஊருக்கு, ஒரு பகுதிக்கு அழைக்கிறீர்கள் என்றால் என்ன நிகழ்ச்சி நிரல் என்று முன்கூட்டியே தயார் செய்து வையுங்கள்.  கொடியேற்ற வேண்டும், கூட்டம் போட வேண்டும், நிர்வாகிகள் இல்லத்துக்கு செல்ல வேண்டும் இப்படி என்னென்ன நிகழ்ச்சிகள் என்று பட்டியலிட்டு எனக்கு அனுப்பி வையுங்கள், அப்படி எதுவுமே செய்யாமல் என்ன கரகாட்டக்காரன் மாதிரி ஆக்கிவிட்டுறீங்க….

அதாவது கரகாட்டக்காரன் தெருவில்  ஆடிக்கொண்டே போகும்போது, ‘அண்ணே அவரு நூறு ரூபாய்  கொடுத்திருக்காரு., அவர் வீட்ல பத்து நிமிசம் ஆடுங்க….அவர் இருநூறு ரூபாய் கொடுத்திருக்காரு இங்க இருபது நிமிசம் ஆடுங்க’னு சொல்ற மாதிரி….

என்ன நிகழ்ச்சிகள்னு சொல்லாமலேயே என்னை அங்கங்க அழைச்சிட்டுப் போறீங்க. இனிமே அதை விட்டுடுங்க. என்னென்ன நிகழ்ச்சிகள், எத்தனை நிமிடங்கள், எந்த இடம் என்று தெளிவாக  பட்டியல் போட்டு கூப்பிடுங்க. அப்பதான் நான் என் வேலையை முழுமையா செய்ய முடியும். என்னை என் வேலையை செய்ய விடுங்க. நீங்களும் உங்க வேலையை  ஒழுங்கா செய்யுங்க.

இப்படித்தான் நான் கட்சி நடத்துவேன்.  நம்ம நிர்வாகிகளுக்குள்ளயே நீ பெரிய ஆளு நான் தான் பெரிய ஆளுனு நினைக்காதீங்க. ஒவ்வொரு  தொகுதியிலயும், ‘அண்ணே இவன் சரியா வேலை செய்ய மாட்டேங்குறான், அவன் சரியா வேலை செய்ய மாட்டேங்குறான்’னு சொல்றதுக்கு மட்டுமே சில பேர் இருக்கான்.

அதையெல்லாம் விட்டுட்டு அவனவன் அவன் வேலையை செய்யணும்.  யார் என்னென்ன செய்யுறீங்கனு எனக்கு நல்லாவே தெரியும். நான் சொல்றதைக்  கேட்டு இங்க இருந்தா இருங்க. இல்லேன்னா போயிட்டே இருங்க.

இங்கேர்ந்து போயி திமுகவுல போய் சேர்ந்தான் ஒரு தம்பி. அவனுக்கு போக்குவரத்துக் கழக பேருந்துக்கு பெயிண்ட் அடிக்கிற ஒப்பந்தம் கொடுத்திருக்காங்க. அதனால இங்கேர்ந்து போனீங்கன்னாலும் நல்லாதான் இருப்பீங்க. என் சொல்படி கேட்க முடியாதவன் போயிக்கிட்டே இருக்கலாம்.

நான் உங்களை  போங்கனு சொல்லலை. கட்சி வேகமாக வளர்ந்துக்கிட்டிருக்கு. எளிய மக்கள் நமக்கு ஏராளமான ஆதரவை கொடுத்துக்கிட்டிருக்காங்க. அதனால யார் போனாலும் எனக்கு கவலை இல்லை. நிர்வாகிகள் நான் தான் பெரிய ஆளு, நீதான் பெரிய ஆளுனு இனியும் நினைக்காதீங்க. இதே நிலைமை போச்சுன்னா நான் தான் பச்சை மட்டைய எடுத்துக்கிட்டு வெளுக்கணும்.

2024 ஆம் ஆண்டுலதான் நாடாளுமன்றத் தேர்தல்  வரணும். இப்ப இருக்கிற நிலைமைய பாத்தா மோடி 2023 லேயே நாடாளுமன்றத் தேர்தலை கொண்டு வந்துவிடுவார்னுதான் எனக்குத் தோணுது.

காலையில் ஒன்றரை மணி நேரம் மாலையில் ஒன்றரை மணி நேரம் ராகுல் காந்தி  நடக்குறதால எந்த மாற்றமும் வந்துடப் போறதில்லை. நமது எதிரி திமுகவும், பிஜேபியும்தான். அதிமுகவெல்லாம் நம்ம பட்டியல்லயே இல்ல.

ஆ.ராசாவுக்காக குரல் கொடுக்க திமுகவுலயே யாரும் இல்லை. நாமதான் குரல் கொடுத்தாகணும்.

தத்துவ ரீதியான பிரச்சினைகள்ல  ஓரு சில ஜனநாயக சக்திகளோடு சேர்ந்து நிற்போம்.  ஆனால்  தேர்தல் களத்தில் நாம் தமிழர் எப்போதும் தனித்துதான் நிற்போம். கூட்டணி வைக்கலாம்னு என்கிட்ட யாரும் சொல்லாதீங்க.

கூட்டணினு கனவுல கூட நினைக்காதே. தனித்துதான் நிற்போம். தமிழ்நாட்ல ஆறு கோடி வாக்காளர்கள் இருக்காங்க. வரும் நாடாளுமன்றத் தேர்தல்ல ஒரு கோடி வாக்குகளை நாம வாங்கியே ஆகணும். அதுக்காக நாம இப்போதிருந்தே களமாடணும் என்று அழைப்பு விடுத்து சுமார்  இரண்டரை மணி நேரம்  பேசினார் சீமான்.

கூட்ட முடிவில் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் அனைவருக்கும் சைவ விருந்து பரிமாறப்பட்டு சீமானும் சேர்ந்து சாப்பிட்டு மாநில நிர்வாகிகளை வழியனுப்பி வைத்திருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

ஆர்.எஸ்.எஸ். பேரணி: அமைச்சர்கள் பங்கேற்பு!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய வீரர்கள் அறிவிப்பு!

+1
1
+1
4
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *