குடும்ப அட்டை இருக்கும் போது மக்கள் ஐடி எதற்கு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜனவரி 7) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு என்று கூறுவதை விட தமிழகம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ”பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்பே திருநெல்வேலியில் கல்வெட்டு இருக்கிறது. எங்க நாடு தமிழ்நாடு. இஷ்டம் இருந்தா இரு. இஷ்டம் இல்லனா ஓடு. அதை விடுத்து தேவையில்லாமல் பேசக் கூடாது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, கடிதத்தில் ”தமிழ்நாடு முதலமைச்சர்” என்று குறிப்பிடுவார். ஆனால் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் தற்போது முதல்வரான போதும் தமிழகம் என்று தான் குறிப்பிடுகிறார். ஆனால் இரண்டுமே தவறு.

தமிழ்நாடு முதலமைச்சராக மாறிவிட்டதா? சரியாக அந்தப்பொருள் வரவேண்டும் என்றால், தமிழ்நாட்டு முதலமைச்சர் என்றுதான் இருக்க வேண்டும். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் என்றால், தமிழ்நாடு முதலமைச்சராகி விட்டது போன்ற பொருளைத் தரும். எனவே அதை மாற்றி தமிழ்நாட்டு முதலமைச்சர் என்று சொல்ல வேண்டும்.
ஆளுநர், தான் சாப்பிடுகிற உணவு, வாங்கும் சம்பளம், பெரிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதால், ஏதாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார். பொழுதுபோகாமல் அவர் பேசிக்கொண்டிருப்பதை இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டுவிட்டுப் போக வேண்டியதுதான். அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை. நமக்குக் கோடி வேலை இருக்கிறது”.
தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் ஐடி எதற்காக என்று கேட்கிறேன். நாம் ஆதார் அட்டையே அவசியம் இல்லை என்று சொல்கிறோம். அப்படி இருக்கும் போது மக்கள் ஐடி எதற்காகப் பயன்படப் போகிறது.
மக்கள் நலத் திட்டம் சரியாக மக்களுக்குப் போய் சேர்கிறதா என்பதற்காக ஒரு மேலோட்டமான காரணத்தைச் சொல்கிறார்கள். ஆனால் குடும்ப அட்டையை வைத்துத் தானே நலத் திட்டங்களை செயல்படுத்துகிறீர்கள்.
அப்படி இருக்கும் போது எதற்காக மக்கள் ஐடி. ஏற்கனவே பள்ளிக்கூடங்களை புணரமைக்க பணம் இல்லை. ஓய்வூதியம் கொடுக்க காசு இல்லை. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து சம்பளம் கொடுக்க காசு இல்லை.
இவ்வளவு வேலை இருக்கும் போது, இந்த மக்கள் ஐடி எதற்காகப் பயன்படும் என்பதற்குத் தெளிவான காரணமும் விளக்கமும் இல்லை. நீங்கள் செய்வது எதுவுமே நலத் திட்டங்கள் இல்லை.
குடும்ப அட்டையை வைத்து இலவசமாகப் பொருட்களைக் கொடுக்கிறீர்கள். பிறகு எதற்கு மக்கள் ஐடி. மக்கள் ஐடி எதற்கு என்பதை விளக்கிச் சொன்னால், அது தேவையா, தேவை இல்லையா, ஆதரிக்கலாமா வேண்டாமா என்ற முடிவிற்கு வரலாம். ஆனால் அதற்குத் தெளிவான விளக்கமும் இல்லை” என்று கூறினார்.
மோனிஷா
ஆசிய திரைப்பட விருது: 6 பிரிவுகளில் பொன்னியின் செல்வன் பரிந்துரை!
செம்மரக் கடத்தல்: சசிகலா உறவினர் புழலில் அடைப்பு!