நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை அனுப்பிய சம்மன் படி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (செப்டம்பர் 12) ஆஜராகவில்லை.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்தார். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி சீமான் ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் காவல் நிலையம் சம்மன் அனுப்பியது. ஆனால் கட்சி பணிகள் காரணமாக சீமான் (இன்று) செப்டம்பர் 12 ஆஜராவதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து சீமான் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவருடைய வழக்கறிஞர்கள் ஆஜராகி காவல் ஆய்வாளரிடத்தில் சீமான் வழங்கிய கடிதத்தைக் கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானின் வழக்கறிஞர் சங்கர், “விஜயலட்சுமி என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஒரு சம்மன் அனுப்பியிருந்தார்.
அதாவது சாட்சிகள் மட்டுமே ஆஜராக கூடிய சிஆர்பிசி 160-ம் பிரிவின் கீழ் ஒரு சம்மனை அனுப்பியிருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் சீமானால் இன்று ஆஜராக இயலவில்லை. அதற்கான காரணங்களை காவல் ஆய்வாளரிடம் சொல்லியிருக்கிறோம்.
அவருக்கு பதிலாக வழக்கறிஞர்களாகிய நாங்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி சீமான் வழங்கிய 2 கடிதங்களைக் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளோம்.
அதில் ஒரு கடிதத்தில், இந்த வழக்கு 2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு. அதன் பிறகு புகார் கொடுத்த விஜயலட்சுமி என்பவர் அந்த புகாரை திரும்பப் பெற்றுவிட்டார். ‘இந்த வழக்கை தொடர விரும்பவில்லை’ என்று அவர் கைப்பட எழுதிக் கொடுத்த கடிதம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
அவர் (விஜயலட்சுமி) சம்பவம் நடந்ததாக சொல்லக் கூடிய 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு (15 வருடங்கள் கழித்து) 2023 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு புகார் மனுவை கமிஷனரிடம் அளித்துள்ளார். அந்த மனு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
இப்போது, 2011-ல் முடித்து வைக்கப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக தான் இந்த வழக்கின் விசாரணை நடக்கிறதா? அப்படியில்லையென்றால் இப்போது காவல் துறை ஆணையரிடத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுவின் அடிப்படையில் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா?
தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் தான் விசாரணை நடக்கிறதா? அப்படி நடந்திருந்தால் அந்த பிரிவுகளின் அடிப்படையில் தான் விசாரணை நடக்கிறதா?
13 வருடங்கள் கழித்து இந்த விசாரணையை தொடருவதற்கு நீதிமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? போன்ற விவரங்களை காவல்துறை ஆய்வாளர் அளிக்கும் பட்சத்தில் நான் ஆஜராகும் போது விசாரணைக்கு என்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்க ஏதுவாக இருக்கும் என்று சீமான் கொடுத்த கடிதத்தை கொடுத்துள்ளோம்.
இந்த கடிதத்தை படித்து பார்த்து உரிய ஆலோசனை செய்து அடுத்த சட்ட நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறோம் என்று பதிலளித்துள்ளார்கள். காவல்துறையினர் அளிக்கும் பதிலை பொறுத்து தான் எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்” என்று தெரிவித்தார்.
மோனிஷா
மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை: அமைச்சர் துரைமுருகன் டார்கெட்!
உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை!
அவ்ளோ தானாயா நீயி…