டங்ஸ்டன் சுரங்கம்… ஒரு பிடி மண்ணைக் கூட தொட முடியாது… சீமான் ஆவேசம்!

Published On:

| By Selvam

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை திரும்ப பெறவும், தமிழக அரசு இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகில் இன்று (டிசம்பர் 13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியபோது, “அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு எதற்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

பல தீர்மானங்களைப் பார்த்து ஏமாந்த இனங்களின் பிள்ளைகள் என்பதாலேயே, இந்த தீர்மானத்தையும் நம்பாமல் நாங்கள் களத்தில் நின்று போராடி வருகிறோம். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் என்ன ஆனது?

நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்தை வாங்கினார்கள். யாரிடத்தில் கொடுத்தார்கள்? ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த தீர்மானம் என்ன ஆனது?

அவ்வப்போது எழுகின்ற கிளர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு, வெற்று தீர்மானங்களையும் குழுக்களையும் மூடி மறைத்தவர்கள் நீங்கள்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகு, அந்த நிலத்தில் என்னை அனுமதிக்ககூடாது என்பதற்காகவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள்.

இந்த தீர்மானம் நிறைவேற்றும் போது சட்டமன்றத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முதல்வர் ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றனர்.

நாங்கள் சொல்கிறோம், நீங்கள் இருவரும் சரியில்லை. உங்களை ஒழித்தால் தான் நாடும் நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ முடியும்” என்று தெரிவித்தார்.

இந்த போராட்டத்திற்கு பிறகு, அரிட்டாப்பட்டி மக்களை சீமான் சந்தித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தனது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் சீமான் பேசும்போது, “இந்த நிலத்தில் ஒரு பிடி மண்ணைக்கூட யாருக்கும் விட்டுத்தர முடியாது. அன்றைக்கு வெள்ளைக்காரர்களுக்கு ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்ககூடாது என்று நாம் போராடினோம்.

இன்றைக்கு ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுகிறோம். இது என் நிலம், என் மண், என் உரிமை. என்னைத் தாண்டி தான் இந்த தாய் நிலத்தில் ஒரு பிடி மண்ணை தொட முடியும்” என்று ஆவேசமாக பேசினார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

அல்லு அர்ஜுன் கைது… அழுத மனைவி ; போலீசார் முன்னிலையில் என்ன செய்தார் தெரியுமா?

சென்னையில் இன்று கனமழையா? – பிரதீப் ஜான் லேட்டஸ்ட் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel