நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில் இன்று (செப்டம்பர் 18) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சென்னை வளசரவாக்கம் காவல் துறையினர் செப்டம்பர் 9 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால் கட்சி பணிகள் காரணமாக செப்டம்பர் 12 ஆம் தேதி ஆஜராவதாக சீமான் தெரிவித்திருந்தார். ஆனால் சீமான் ஆஜராகாமல் அவருடைய வழக்கறிஞரிடம் 2 கடிதங்களை கொடுத்து அனுப்பியிருந்தார். சீமான் கொடுத்தனுப்பிய கடிதங்களை வழக்கறிஞர் சங்கர் வளசரவாக்கம் காவல் ஆய்வாளரிடத்தில் கொடுத்தார்.
அந்த கடிதத்தில் விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த விவரம் குறித்து பதில் அளித்தால் விசாரணைக்கு ஆஜராகும் பட்சத்தில் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக சீமான் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்த புகாரை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார். சீமான் தரப்பு வழக்கறிஞராக அவருடைய மனைவி கயல்விழியும் காவல் நிலையம் வந்தார்.
முன்னதாக சீமான் வருவதற்கு முன்னர் வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சீமான் வருகையால் ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் காவல் நிலையம் முன்பு குவிந்திருந்தனர்.
அப்போது சீமானுடன் வழக்கறிஞர்கள் உட்பட 5 மட்டுமே காவல் நிலையத்திற்குள்ளே செல்ல வேண்டும் என்று கூறியதால் நாம் தமிழர் மற்றும் காவலர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மோனிஷா
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடியின் கடைசி உரை!
நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப கதையில் ஜெயம் ரவி