விஜய் – அண்ணாமலையை பாராட்டிய சீமான்
விஜய்க்கு நேரில் அழைத்தாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே, அதை பாராட்ட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வெட்கித் தலைகுனிய வேண்டிய அவமானம்!
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் செய்தியாளர்களை இன்று (டிசம்பர் 4) சந்தித்து சீமான் பேசுகையில், ”தமிழக அரசின் நடவடிக்கை மழை வெள்ளத்திற்குள் மூழ்கிவிட்டது. 3 மாதத்திற்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இப்போது இல்லை. அந்த பாலத்தின் தரம்போல தான் ஆட்சியின் தரமும் இருக்கிறது.
பொன்முடியின் மீது வீசப்பட்ட சேறு, தண்ணீரால் சுத்தப்படுத்தினால் போய்விடும். ஆனால் இந்த ஆட்சியாளர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட கறையை எப்படி துடைக்க முடியும்?
கடலூரும், சென்னையும் ஒவ்வொரு ஆண்டும் புயலால் பாதிக்கப்படுகின்றன. அதற்கான காரணத்தை ஆராய்ந்து சரிசெய்வது தானே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்? இப்படிப்பட்ட ஆட்சியாளர்களிடம் நாம் இருப்பதே வெட்கித் தலைகுனிய வேண்டிய அவமானம்.
வரி செலுத்த முடியாது என சொல்லவேண்டும்!
பேரிடர் காலங்களில் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது தானே? பின்னர் எதற்கு வரி கட்ட வேண்டும்? மத்திய அரசுக்கான நிதி எங்கிருந்து வருகிறது? மாநில அரசுகள் கொடுக்கிற நிதி தானே? தானே, ஓகி என எந்தப் புயலுக்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. கடந்த வருடம் தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்பிற்கு நிதி தரவில்லை.
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றால் தமிழகம் ஏன் அவர்களுக்கு வரி செலுத்த வேண்டும்? அதை தரமுடியாது என்று சொல்லவேண்டும்.
விஜய்யின் உதவும் எண்ணம்!
விஜய்யால் மக்கள் களத்தில் போய் நிற்கமுடியாது. காரணம் அவர் போய் அங்கு நின்றால் பாதிக்கப்பட்ட மக்களை விட அவரை பார்க்க வேண்டும் என்று வருகிற கூட்டம் அதிகமாகிவிடும். பிறகு அந்த பிரச்சனையை வேறு சமாளிக்க வேண்டும். அதனை சமாளிப்பதே பெரும்பாடாகிவிடும். அப்படி நடந்தால் அதற்கும் ஒரு விமர்சனம் எழும்.
விஜய்யின் உதவும் எண்ணத்தை பாராட்ட வேண்டும். அதை கூட மற்றவர்கள் செய்யவில்லை. அவராவது உதவி செய்கிறார். ஆனால் உதயநிதியின் பிறந்தநாளை உதய விழா என்று திமுக அமைச்சர்களே கொண்டாடி வருகிறார்களே? அதை என்ன சொல்வது?
அண்ணாமலை பேச்சில் நிதானம்!
லண்டன் சென்று படித்து வந்த பிறகு அண்ணாமலை நிதானமான பேசி வருவதாக கேள்விப்பட்டேன். அவர் எங்கு படித்து வந்தார் என்பதை தெரிந்து கொண்டால் இங்குள்ள சிலரையும் அனுப்பி வைக்கலாம்” என்று சீமான் தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் பரிதாப மரணம்… மகளின் உருக்கமான பதிவு!
ரஹ்மான் ரூட்டில் தயாரிப்பாளர் சங்கம்… யூடியூப் ரிவ்யூவர்ஸுக்கு செக்!