ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளதால், ஆளும் திமுக, நாம் தமிழர் மட்டுமே தேர்தல் களத்தில் உள்ளன.

திமுக சார்பில் வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமியுடன் சந்திரகுமார் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதல் சீதாலட்சுமிக்கு ஆதரவாக சீமான் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தொடர்ந்து ஈரோடு தேர்தல் களத்திலும் பெரியாரை சீமான் விமர்சித்து வருகிறார்.
முதல் நாளான ஜனவரி 25-ஆம் தேதி கச்சேரி வீதியில் உள்ள பெரியார் வாழ்ந்த வீட்டின் முன்பாக சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அவரை கண்டித்து காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.
பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினரும் கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இதைதொடர்ந்து, திமுக தலைமையிலிருந்து அக்கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு முக்கிமான உத்தரவு ஒன்று பறந்திருக்கிறது.

அதாவது… “சீமான் பரப்புரையில் ஈடுபடும்போது திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அந்த வழியாக சென்றால் கூட வேடிக்கையோ அல்லது காரில் இருந்தோ பார்க்கக்கூடாது.
கருப்பு சட்டை போட்ட தங்களது கட்சி நிர்வாகிகளை மேடையில் கல் எறிய வைத்துவிட்டு திமுகவினர் தான் கல்லெறிந்தார்கள் என்று கலவரத்தை ஏற்படுத்த சீமான் திட்டமிட்டுள்ளார். அதனால் சீமான் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் உங்கள் தலைகூட அங்கு தெரியக்கூடாது” என்று அறிவாலயத்தில் இருந்து உத்தரவு போயுள்ளதாம்.