பிரபாகரனுடன் சீமான் போட்டோ கிராபிக்ஸா? – இயக்குநர் சொல்வதென்ன?

Published On:

| By christopher

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் போட்டோவை ‘எடிட்’ செய்து கொடுத்ததே நான் தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

வெங்காயம், பயாஸ்கோப் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். இவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”இவர், அவரை சந்திக்கவே இல்லை! எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்” என இன்று பதிவிட்டிருந்தார்.

பிரபாகரனை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் தான் அவரை சந்தித்ததாகவும், பிரபாகரன் தனக்கு உணவு சமைத்து போட்டதாகவும் சீமான் பலமுறை மேடையில் உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.

இந்த நிலையில் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை என்று இயக்குநர் சங்ககிரி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சி களமிறங்கியுள்ள நிலையில், சங்ககிரியின் இந்த பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

தொடர்ந்து சன் நியூஸ் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் இன்று அளித்துள்ள பேட்டியில், “நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக வேலை செய்து வந்தேன். அப்போது, நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த செங்கோட்டையன், சீமான் உடன் நெருக்கமாக இருக்க கூடியவர். நான் அவருக்கு சில படங்களை எடிட் செய்து கொடுத்துள்ளேன்.

அப்படி ஒருமுறை பிரபாகரனுடன் இயக்குநர் மகேந்திரன் இருக்கும் டிவிடிகளையும், தனியாக இருக்கும் சீமான் படத்தையும் கொண்டு வந்தார்.

அவர், ‘தலைவர் பிரபாகரன் அவர்களுடன் சீமான் இருக்கும்படியாக கிராபிக்ஸ் செய்து கொடுங்கள். அந்த படத்தை சீமானுக்கு அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். அவர் சந்தோசப்படுவார்’ என்றார். என்னால் முடிந்த அளவுக்கு அந்த படத்தை எடிட் செய்து இருவரையும் அருகருகே இருப்பதுபோல சேர்த்துக் கொடுத்தேன்.

பிற்காலத்தில் சீமான், பிரபாகரனை சந்தித்ததாக வேறு வேறு தகவல்களுடன் உலா வந்தது. வெங்காயம் பட ரிலீசின்போது செங்கோட்டையனிடம் இதுபற்றி கேட்டேன். ’நம் புகைப்படத்தால் ஒரு அரசியல் தலைவர் உருவாகியுள்ளார் என சந்தோஷமாக கூறினார். அப்போது நாம் உருவாக்கிய புகைப்படம் நல்ல விஷயத்திற்காக பயன்படுகிறதே’ என்று விட்டுவிட்டேன்.

ஆனால், அதே காலகட்டத்திலேயே, இந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்ற தகவலும் பரவியது. ஆனால், இதுவரை நான் யாரிடமும் இதை சொன்னதில்லை. அப்படிப்பட்ட எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை.

பிரபாகரனை சீமான் சந்தித்ததாக சமூகவலைதளங்களில் தற்போது கிடைக்கும் புகைப்படம் நான் உருவாக்கியது. இது தவிர பிரபாகரனுடன் சீமான் இருப்பதுபோல வேறு புகைப்படம் எதுவும் இணையத்தில் எங்குமே இல்லை. சீமானும் அதை வெளியிடவில்லை. சீமான் பிரபாகரனை சந்தித்தாரா? அப்போது புகைப்படம் எடுத்தாரா? இல்லை சந்திக்கும்போது புகைப்படம் எடுக்கவில்லையா என்பது பற்றி நான் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.

பிரபாகரன் பெயரையே உச்சரிக்கவே பயந்த சூழலில் நான் வந்தபிறகுதான் இங்கு பிரபாகரன் பெயரை உச்சரிக்கும் சூழல் உருவானது என சீமான் சொல்கிறார். இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு சீமான் சொல்லும் நிறைய தகவல்கள் உண்மைக்கு முரணானதாக இருக்கும். அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்ற முறையில் பல தடவை நான் சங்கடப்பட்டிருக்கிறேன்” என சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து திமுக மாணவரணி தலைவரான ராஜிவ் காந்தி, ”வெட்கம்.. மானம்.. சூடு… சொரனை.. ரோசம்…. திராணி… தெம்பு….. மனுசனா இருந்தா புகார் கொடுத்து சட்டப்படி நடவடிக்கை எடு பார்ப்போம்” என சீமானுக்கு நேரடி சவாலை வெளியிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share