போலீஸ் சம்மன்: ஆஜர் ஆகாத சீமான்… ஏன்?

Published On:

| By vanangamudi

Seeman not appearing in station

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், போலீஸ் அளித்த சம்மன்படி இன்று பிப்ரவரி 14 கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். Seeman not appearing in station

இது தொடர்பாக என்ன நடந்தது என விசாரித்தோம்.

பெரியாரை கொச்சைப்படுத்தி பேசியதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகாரில் சீமான் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் கடலூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் வடலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கும் ஒன்று.

இந்த வழக்கின் விசாரணைக்காக பிப்ரவரி 14-ஆம் தேதி சீமான் வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் சில தினங்களுக்கு முன்பு சீமான் வீட்டுக்கே சென்று சம்மன் அளித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வடலூர் காவல் நிலையத்தில் சீமான் சார்பாக வழக்கறிஞர் காமராஜ் ஆஜரானார்.

அவர் வடலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் சீமான் தரப்பில் சில விளக்கங்களை அளித்துள்ளார்.

அதாவது, ‘பெரியாரை அவமதித்து பேசிய ஒரே காரணத்துக்காக சீமான் மீது தமிழகம் முழுவதும் சுமார் 200 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த புகார்களின் அடிப்படையில் சீமானுக்கு ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் சம்மன் அனுப்பி வருகிறார்கள்.

வடலூர் காவல் நிலையத்தை அடுத்து செங்கல்பட்டில் இருந்து சம்மன் வந்துள்ளது.

இந்த நிலையில் ஒரே சம்பவத்திற்காக பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து, ஒரே விசாரணையாக நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனு மீது டிஜிபி எடுக்கும் நடவடிக்கைக்கு பிறகே சீமான் விசாரணைக்கு ஆஜராவது பற்றி முடிவு எடுக்க முடியும்” என்று சீமான் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனு மீதான முடிவுக்காக போலீசாரும் காத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share